கொல்கத்தாவில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான சஞ்செய் ராயிடம் கடந்த மாதம் 25 ஆம் தேதி உண்மை கண்டறியும் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில், சிபிஐ 10 கேள்விகள் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கும் மருத்துவமனை ஊழியரான சஞ்செய் ராயிடம் உண்மை கண்டறியும் சோதனை நடைபெற்றது.
இந்த சோதனையின் போது, சஞ்செய் ராய் தனக்கும் இந்த கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சொல்லியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி சஞ்செய் ராய் கைது செய்யப்பட்டதும், கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். ஆனால் அடுத்த சில நாட்களில் யூ டர்ன் அடித்த சஞ்செய் ராய், தான் ஒரு அப்பாவி என்றும் தனக்கும் இந்த கொலைக்கும் சம்பந்தம் இல்லை எனவும் தெரிவித்தார்.
இந்த வழக்கு சிபிஐக்கு மாறிய நிலையில், கடந்த 25 ஆம் தேதி உண்மை கண்டறியும் சோதனை நடைபெற்றது. இந்த உண்மை கண்டறியும் சோதனையின் போது, உடலை பார்த்ததும் அங்கிருந்து ஓடிவிட்டதாக கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சஞ்செய் ராயிடம் உண்மை கண்டறியும் சோதனையின் போது 10 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. சிபிஐ அதிகாரிகளுடன் பாலிகிராப் டெஸ்ட் நடத்தும் நிபுணர்களும் இருந்துள்ளனர்.
இந்த விசாரணையின் போது, சஞ்செய் ராய், "தனக்கும் இந்த கொலைக்கும் தொடர்பு இல்லை என்று கூறியிருக்கிறார். சடலத்தை பார்த்ததும் செமினார் ஹால் வழியாக தப்பி ஓடினேன்" என்று கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இந்த உண்மை கண்டறியும் சோதனையின் போது பல தவறான தகவல்கள் நம்பத்தகாத தகவல்கள் கிடைத்ததாவும் சொல்லப்படுகிறது.
உண்மை கண்டறியும் சோதனை நீதிமன்றத்தில் ஒரு ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்படாது என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக, நீதிமன்றத்திலும் நிரபராதி என்பதை நிரூபிக்க தான் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புக்கொள்வதாக சஞ்செய் ராய் கூறியிருந்தார். இந்த வழக்கில் இதுவரை சிபிஐயால் உறுதியான ஆதாரங்களை திரட்ட முடியவில்லை என்றும் விசாரணை நடத்தி குற்றத்தை நிரூபிக்கட்டும் என சஞ்செய் ராயின் வழக்கறிஞர் கவிதா சர்க்கார் இந்தியா டுடே தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
குற்றம் சாட்டப்பட்டுள்ள சஞ்செய் ராய், குற்றம் நடப்பதற்கு முன்பாக வடக்கு கொல்கத்தாவில் உள்ள ரெட் லைட் ஏரியாவிற்கு மது அருந்திவிட்டு சென்றதாகவும் ஆபாச படங்களுக்கு அடிமையாக இருந்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.