துபாய்க்கு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற ஓய்வுபெற்ற விமானப்படை வீரர் ஒருவர் ரி-56 துப்பாக்கியின் தோட்டாவுடன் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளால் நேற்று (31) கைது செய்யப்பட்டுள்ளார்.
குருணாகல், நிகடலுபொத்த, ஹிரிபிட்டியவில் வசிக்கும் 37 வயதுடைய ஓய்வுபெற்ற விமானப்படை வீரர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் நேற்று (31) பிற்பகல் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் துபாய் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.
இதன்போது, இவர் கொண்டு சென்ற பயணப்பொதியிலிருந்து ரி-56 தோட்டா ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த தோட்டா தன்னுடையது இல்லை என வாக்குமூலம் கொடுத்த விமானப்படை வீரர் , மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்த ஓய்வுபெற்ற இராணுவ வீரரை இன்று ஞாயிற்றுக்கிழமை (01) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.