பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கான உதவி ஆசிரியர் நியமன விவகாரம் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால், அந்த விடயத்தில் அமைச்சரவைக்குத் தலையிட முடியாது. எனவே நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடையும் வரை காத்திருக்க வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
உதவி ஆசிரியர் நியமனத்துக்கான போட்டி பரீட்சைகளைக் கடந்த 17ஆம் திகதி நடத்துவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டிருந்த நிலையில், பைசர் முஸ்தபா தாக்கல் மனு தாக்கல் செய்தமையால் அதற்கு நீதிமன்றத்தால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இவ்விவகாரத்தில் தான் தலையிடுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் ஆகியோர் தெரிவித்திருந்தனர்.
அது மாத்திரமின்றி இவ்வாரம் அமைச்சரவையில் இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையிலேயே இன்று வியாழக்கிழமை (22) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இது தொடர்பில் வினவிய போது அமைச்சர் பந்துல மேற்கண்டவாறு பதிலளித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள எந்தவொரு விடயம் தொடர்பிலும் அமைச்சரவையால் எவ்வித தீர்மானத்தையும் எடுக்க முடியாது. எனவே இவ்வாறான சந்தர்ப்பங்களில் நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடையும் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.
இதற்கு முன்னர் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த, இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்றத்திலும் நீதிமன்றத்திலும் தெளிவுபடுத்தியிருக்கின்றார். ஒரு சிலரால் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களுக்காகத் தாக்கல் செய்யப்படும் மனுக்களால், நியமனங்கள் கால தாமதமாகும் போது மாணவர்களே பாதிக்கப்படுகின்றனர்.
எவ்வாறிருப்பினும் ஏதேனுமொரு நியமனத்தை வழங்குவதற்கு நீதிமன்றத்தால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டால், அந்த உத்தரவை மீறி நியமனத்தை வழங்கக் கூடிய அதிகாரம் அமைச்சருக்கோ அமைச்சரவைக்கோ கிடையாது என்றார்.