கண் சத்திர சிகிச்சை மேற்கொண்டதன் பின்னர் ப்ரெட்னிசோலோன் அசிடேட்என்ற மருந்தின் பாவனையால் பார்வை குறைபாடு ஏற்பட்ட 3 பேர் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலியவிடமிருந்து 300 மில்லியன் ரூபாவை நஷ்ட ஈடாக கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (20) வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். மேலும் பத்து பேருக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது.
கெஹலிய ரம்புக்வெல்ல, ஜனக சந்திரகுப்த, தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம், பேராசிரியர். எஸ்.டி. ஜெயரத்ன, வைத்தியர் விஜித் குணசேகர, வைத்தியர் அசேல குணவர்தன, வைத்தியர் ரொஹான் எதிரிசிங்க, வைத்தியர் மகேந்திர செனவிரத்ன, யக்கலையைச் சேர்ந்த Chamee Chemist (Pvt) Ltd, Indiana Ophthalmics LLP மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் இந்த வழக்குகளின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
மேற்கூறிய பதினொரு பிரதிவாதிகளிடமிருந்து நட்டஈடு வழங்குமாறு கோரி, இன்விக்டஸ் சட்ட நிறுவனத்தின் சட்டத்தரணிகளான சம்பத் விஜேவர்தன, தமலி குருப்பு மற்றும் பிரவிங்க ரத்னசேகர ஆகியோரின் ஊடாக மனுதாரர் இந்த வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 05 ஆம் திகதி நுவரெலியா பொது வைத்தியசாலையின் மருத்துவ ஊழியர்களால் கண்புரை சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாக கந்தப்பளை பகுதியைச் சேர்ந்த மனுதாரர் மக்கரி ராஜரத்தினம் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
அறுவை சிகிச்சை முடிந்து ஏப்ரல் 06 ஆம் திகதி வீட்டிற்கு அனுப்பப்பட்டதாகவும், இந்தியானா ஆப்தால்மிக்ஸ் எல்எல்பி இந்தியா தயாரித்த ப்ரெட்னிசோலோன் அசிடேட் (Prednisolone Acetate) கண் சொட்டு மருந்துகளைப் பயன்படுத்த நுவரெலியா வைத்தியசாலையின் மருத்துவ ஊழியர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சை முடிந்து பின்னர் குணமடைவதற்காக வைத்தியசாலையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இவர் பரிந்துரைத்தப்படி கண் சொட்டு மருந்தினை பயன்படுத்திய பிறகு ஏப்ரல் 19 ஆம் திகதி முதல் கண்ணீர், எரிச்சல், வலி மற்றும் தலைவலியால் பாதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் மே மாதம் 10 ஆம் திகதி தேசிய கண் வைத்தியசாலையில் கூடுதல் மருத்துவப் பரிசோதனை மற்றும் அனுமதிக்கப்பட்ட போது, அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, மேற்கூறிய ப்ரெட்னிசோலோன் அசிடேட் கண் சொட்டு மருந்து மூலம் அவர் படிப்படியாக பார்வை இழப்பதைக் காண முடிந்ததாக மேலும் தெரிவித்துள்ளார்.