நாட்டில் இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள கருத்து கணிப்புக்களின் அடிப்படையில் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியை வெற்றியடைய செய்ய மக்கள் தீர்மானித்து விட்டதாக தெரியவந்துள்ளது. அந்த வெற்றி எமது வெற்றி அல்ல. அது மக்களின் வெற்றியாகும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நாவலப்பிட்டியவில் இன்று திங்கட்கிழமை (19) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டில் இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள கருத்து கணிப்புக்களின் அடிப்படையில் தேர்தலில் மக்கள் ஐக்கிய மக்கள் சக்தியை வெற்றியடைய செய்ய தீர்மானித்து விட்டதாக தெரியவந்துள்ளது.
அந்த வெற்றி எமது வெற்றி அல்ல. அது மக்களின் வெற்றியாகும். விசேடமாக நாட்டின் பொருளாதாரம் சீரழிந்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி தலைமையிலான அவருடைய பங்காளிகள் தமது சகாக்களின் நலன்களுக்காக செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் மீண்டும் பொருளாதாரத்தை கட்டி எழுப்பும் வாய்ப்பை எமது அரசாங்கத்தில் ஏற்படுத்துவோம்.
தனவந்தர்களுக்காக மாத்திரம் செயல்படுத்தப்படும் பொருளாதார வேலை திட்டங்களை நாம் இல்லாமலாக்குவோம். நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டை செயற்படுவதற்காக அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று கூறுகின்றனர். அர்ப்பணிப்பு கீழ்மட்ட மக்களிடமிருந்து ஆரம்பிக்கக் கூடாது. நாட்டின் தலைவர் மற்றும் தனவந்தர்களிடமிருந்து அர்ப்பணிப்புகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். அவர்களே அதிகப்படியான அர்ப்பணிப்புகளையும் செய்ய வேண்டும்.
பொருளாதார நலன்கள் சிறிய மக்களையும் சென்றடைய கூடிய யுகத்தை நாம் உருவாக்குவோம். நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டுக்கமைய பொருளாதார வேலை திட்டங்கள் நடைமுறைப்படுத்ததாக இடைக்கால ஜனாதிபதி கூறுகின்றார். அது பொய்யாகும். அனைத்து வேலை திட்டங்களையும் முன்னெடுப்பது அரசாங்கமே. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதாரக் கொள்கைகளால் நாட்டில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வறுமையை முற்றாக ஒழிக்க கூடிய வேலைத்திட்டங்களை நாம் நடைமுறைப்படுத்துவோம். பொய்களை கூறி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர். காலாவதியான மருந்துகளை இறக்குமதி செய்த அமைச்சருக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவரப்பட்ட போது இந்த ஜனாதிபதியும் அவருடைய அமைச்சர்களுமே அவரை பாதுகாத்தனர். ஆனால் சட்டம் அவரைத் தண்டித்துள்ளது.
சுகாதாரம், வலுசக்தி துறை என அனைத்திலும் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட அனைவரையும் எமது ஆட்சியில் சட்டத்தின் முன் நிறுத்துவோம். அது மாத்திரம் என்று அவர்களால் கொள்ளையிடப்பட்ட சொத்துக்களை கைப்பற்றுவோம். தேயிலை தொழிற்துறையைக் கட்டியெழுப்புவோம்.
ஒவ்வொரு தேர்தல் காலங்களிலும் சம்பளம் வழங்குவதாக தொழிலாளர்கள் ஏமாற்றப்படுகின்றனர். சம்பள அதிகரிப்பை எதிர்ப எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் யுகத்தை நிறைவுக்கு கொண்டு வந்து அவர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவோம். சட்ட திட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்தி காணி உரிமை அற்ற மக்களுக்காக அவற்றை வழங்க நடவடிக்கை எடுப்போம் என்றார்.