வூஸ்டர்ஷயர், நியூ ரோட், கவன்டி மைதானத்தில் நடைபெற்றுவரும் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான 4 நாள் பயிற்சிப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் நிஷான் மதுஷ்க, ஏஞ்சலோ மெத்யூஸ், அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா ஆகியோர் துடுப்பாட்டத்தில் பிரகாசித்து அரைச் சதங்களைப் பெற்றனர்.
இந்த நான்கு நாள் பயிற்சிப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 139 ஓட்டங்களுக்கு சுருண்ட இலங்கை, இரண்டாவது இன்னிங்ஸில் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 306 ஓட்டங்களைப் பெற்றது.
எனினும் இந்தப் போட்டியில் தோல்வியை இலங்கை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது.
முதல் இன்னிங்ஸில் திமுத் கருணாரட்ன (26), ப்ரபாத் ஜயசூரிய (20), மிலான் ரத்நாயக்க (17) ஆகிய மூவரே 15 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.
பந்துவீச்சில் ஸமான் அக்தர் 32 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் ஜொஷ் ஹல் 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து லயன்ஸ் முதல் இன்னிங்ஸில் 324 ஓட்டங்களைப் பெற்றது.
ஹம்ஸா ஷய்க் 91 ஓட்டங்களையும் கேசி ஆல்ட்றிஜ் 78 ஓட்டங்களையும் பென் மெக்கின்னி 46 ஓட்டங்களையும் பெற்று துடுப்பாட்டத்தில் பிரகாசித்தனர்.
பந்துவீச்சில் ப்ரபாத் ஜயசூரிய 102 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் கசுன் ராஜித்த 51 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
முதல் இன்னிங்ஸ் நிறைவில் 185 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்த இலங்கை, இரண்டாவது இன்னிங்ஸில் 306 ஓட்டங்களைப் பெற்றது.
நிஷான் மதுஷ்க 77 ஓட்டங்களையும் திமுத் கருணாரட்ன 43 ஓட்டங்களையும் பெற்றதுடன் இருவரும் 105 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொத்தனர்.
எனினும் திமுத் கருணாரட்ன, குசல் மெண்டிஸ் (3), நிஷான் மதுஷ்க, தினேஷ் சந்திமால் (0) ஆகிய நால்வரும் சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்தனர்.
எனினும் ஏஞ்சலோ மெத்யூஸ் (51), தனஞ்சய டி சில்வா (66) ஆகிய இருவரும் அரைச் சதங்கள் பெற்றதுடன் 5ஆவது விக்கெட்டில் 69 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
தொடர்ந்து 25 ஓட்டங்களைப் பெற்ற சதீர சமரவிக்ரமவுடன் 6ஆவது விக்கெட்டில் மேலும் 51 ஓட்டங்களை தனஞ்சய டி சில்வா பகிர்ந்தார்.
பந்துவீச்சில் பர்ஹான் அஹ்மத் 87 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
122 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் இங்கிலாந்து லயன்ஸ் நேற்றைய 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்களை இழந்து 47 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
போட்டியின் கடைசி நாள் ஆட்டம் பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகும்.