எனக்கு ஆதரவளித்துவந்த மைத்திரிபால சிறிசேன ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துகொள்ளப்போவதாக கேள்விப்பட்டேன். அவர் அவ்வாறு சென்றால் மிகவும் நல்லது என நினைக்கிறேன் என தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் செயலகத்தில் வியாழக்கிழமை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், வேட்புமனு தாக்கல் செய்யும்போது இதுவரை காலம் பின்பற்றப்பட்டுவந்த ஒழுக்கம் கடைப்பிடிக்கப்படுவதை காணக்கூடியதாக இருக்கவில்லை. ஒரு சில வேட்பாளர்கள் தங்களின் ஆதரவாளர்களுடன் தேர்தல் ஆணைக்குழுவுக்குள் மிகவும் ஒழுக்க ஈனமாக செயற்பட்டதுடன் கிராமங்களில் செயற்படுவது போல் குழுக்கள் குழுக்களாக செயற்பட்டு வந்ததை காணக்கூடியதாக இருந்தது.
அவ்வாறான செயற்பாடுகளை சர்வதேச நாடுகள் காணும்போது எமது நாடு தொடர்பில் என்ன நினைப்பார்கள்? சர்வதேச நாடுகள் எங்களைப்பற்றி காணும்போது எங்களுக்கு கவலையாக இருக்கிறது. ஏனெனில் நாட்டின் முதற்பிரஜையாகுவதற்கு முயற்சிக்கும் நபர்கள் எவ்வாறு செயற்படுகிறார்கள் என்பது தொடர்பில் உலக நாடுகள் பார்த்துக்கொண்டிருக்கின்றன.
அடுத்த விடயம்தான், ஒரு வேட்பாளரை ஊக்குவிப்பதற்காக, பொம்மை (டம்மி) வேட்பாளர்களை நியமித்து, ஒரு வேட்பாளருக்காக 15, 20 பேர் வரை செயலகத்துக்குள் வந்திருந்தார்கள். அவர்கள் குண்டர்கள் கூட்டம் போன்றே அந்த இடத்தில் செயற்பட்டு வந்தனர். அதனால் இவ்வாறான சந்தர்ப்பங்களில் எதிர்காலத்திலாவது ஒழுக்கத்தை பாதுகாக்க தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
ஏனெனில் நாங்கள் ஒழுக்கமாக இருக்குமாறு மற்றவர்களுக்கு சொல்வதற்கு முன்னர் நாங்கள் அதன் பிரகாரம் செயற்பட வேண்டும். அதனால் இந்த விடயங்களை அவர்கள் சரி செய்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அவர்களின் நடவடிக்கை ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கும் அது அவப்பெயராகும் என்றார்.
இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம், உங்களை வேட்பாளராக கொண்டுவந்த முன்னாள் ஜனாதிபதி ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையப்போவதாக தெரியவருகிறதே? அதற்கு அவர் பதிலளிக்கையில், ஆம், அப்படி என்று நானும் நினைக்கிறேன். அவர் அந்த பக்கம் சென்றால் நல்லது என்றே நினைக்கிறேன் என்றார்.