நாட்டின் 9 ஆவது நிறைவேற்றுத்துறை அதிகாரமுடைய ஜனாதிபதியை தெரிவு செய்யும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக 40 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ள நிலையில், வேட்புமனுக்களை பொறுப்பேற்றல் இன்று வியாழக்கிழமை (15) இடம்பெறவுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை (15) காலை 9 மணிமுதல் 11 மணிவரையான காலப்பகுதியில் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு 40 பேர் வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.இதற்கமைய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட 22 பேரும், வேறு அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட 1 வேட்பாளரும், சுயேட்சை வேட்பாளராக 17 பேரும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு 41 பேர் கட்டுப்பணம் செலுத்தியிருந்த நிலையில் 35 பேர் மாத்திரம் வேட்புமனுக்களை சமர்த்தித்து போட்டியிட்டனர்.
ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடுவதற்கு 40 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு கடந்த ஜுலை மாதம் 26 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.கட்டுப்பணம் செலுத்துவதற்கு 14 நாட்கள் காலவகாசம் வழங்கப்பட்டது.
இக்காலப்பகுதிக்குள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள்,பிறிதொரு அரசியல் கட்சி மற்றும் சுயாதீன வேட்பாளர் என்ற அடிப்படையில் 40 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.கட்டுப்பணம் செலுத்தலுக்காக வழங்கப்பட்ட காலவகாசம் நேற்று புதன்கிழமை நண்பகலுடன் நிறைவடைந்தது.
தாக்கல் செய்யப்படும் வேட்பு மனுக்கள் தொடர்பில் மு.ப 9 மணிமுதல் 11.30 மணிவரையான காலப்பகுதியில் எவரேனும் வேட்பாளர் அல்லது அத்தகைய எதிர் வேட்பாளரின் பெயர் குறித்த நியமனப்பத்திரத்தில் கைச்சாத்திட்டவர் அல்லது பிறிதொருவர் ஆட்சேபனைகளை முன்வைக்க முடியும்.