காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கடையொன்றின் உரிமையாளர் ஒருவர் கொல்லப்பட்டது தொடர்பாக பங்களாதேசின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதத்திலும் இந்த மாதத்தின் தொடக்கத்திலும் வங்கதேசத்தில் மாணவர் போராட்டம் மிகத் தீவிரமாக இருந்தது. இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்ததை அடுத்து போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த போராட்டத்தில் மாணவர்கள் காவல்துறையினர் அப்பாவி பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.
ஜூலை 19 அன்று முகமதுபூர் பகுதியில் பொலிஸார் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கடையொன்றின் உரிமையாளர்அபு சயீத் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த அமிர் ஹம்சா ஷாடில் என்பவர் டாக்கா பெருநகர நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ராஜேஷ் சவுத்ரி முன் விசாரணைக்கு வர உள்ளது.
அமிர் ஹம்சா ஷாடில் தாக்கல் செய்துள்ள மனுவில் “ஜூலை 19-ம் தேதி மாலை 4:00 மணிக்கு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அபு சயீத் கொல்லப்பட்டார். இந்த கொலைக்கு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அவாமி லீக் பொதுச் செயலாளர் ஒபைதுல் குவாடர் உள்துறை அமைச்சர் அசதுஸ்மான் கான் கமல் முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ) சவுத்ரி அப்துல்லா அல்-மாமுன் ” என அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தவிர பல பெயர் குறிப்பிடப்படாத உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகளும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவுக்கு தப்பிச் சென்ற பிறகு அவருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கு இதுவாகும்.
வழக்கு தொடர்ந்திருக்கும் அமிர் ஹம்சா ஷாடில் கொலை செய்யப்பட்ட அபு சயீத்துக்கு உறவினர் அல்ல என்று கூறப்படுகிறது. எனினும் வங்கதேச குடிமகன் என்ற முறையில் இந்த வழக்கை பதிவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள் பஞ்சகர் மாவட்டத்தில் உள்ள போடா உபாசிலாவில் வசிக்கின்றனர் என்றும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யும் நிலையில் அவர்கள் இல்லை என்றும் அமீர் ஹம்சா ஷாடில் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.