நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கியதற்கு மஹிந்த ராஜபக்ஷவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளி ஒட்டுமொத்த மக்களையும் கையேந்த வைத்த ராஜபக்ஷ குடும்பத்துக்கு பதிலடி கொடுக்க வேண்டும். நாமல் ராஜபக்ஷவை படுதோல்வியடைய செய்து மக்கள் தமது வெறுப்பை வெளிப்படுத்த வேண்டும்.
நாட்டை வங்குரோத்துக்கு தள்ளியவர்களால் எவ்வாறு பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும். நாட்டு மக்கள் தெளிவாக சிந்திக்க வேண்டும். செப்டெம்பர் 21 ராஜபக்ஷர்களுக்கு சிறந்த படிப்பினையை கற்றுக்கொடுக்கும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கொழும்பு பிலியந்தல பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (11) இடம்பெற்ற ஐக்கிய குடியரசு முன்னணியின் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, நாட்டுக்கு வருமானத்தை ஈட்டிக் கொடுக்கும் சிறந்த அபிவிருத்தித் திட்டங்களை நல்லாட்சி அரசாங்கத்தில் முன்னெடுத்தோம்.நட்டமடைந்த அரச நிறுவனங்களையும் இலாபமடைய செய்து அதன் பயனை நாட்டு மக்களுக்கு பல்வேறு வழிகளில் பெற்றுக்கொடுத்தோம்.
2019 ஆம் ஆண்டு இனவாதம் மற்றும் மதவாதத்தை முன்னிலைப்படுத்தி கோட்டபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தார்.இவர் ஜனாதிபதியாகியது நாட்டின் துரதிஸ்டம் என்கே குறிப்பிட வேண்டும்.கோட்டபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தவுடன் எவ்விதமான தூரநோக்கு சிந்தனைகளுமில்லாமல் பல அபிவிருத்தி கருத்திட்டங்களை இரத்து செய்தார்.இலகு ரணில் திட்டத்தை விசேடமாக குறிப்பிட வேண்டும்.
2020 ஆம் ஆண்டு இலகு ரயில் அபிவிருத்தி திட்டத்தை இரத்து செய்யாமலிருந்திருந்தால் இந்த ஆண்டு அந்த அபிவிருத்தி திட்டத்தை நிறைவு செய்திருக்க முடியும்.இலகு ரயில் அபிவிருத்தி திட்டம் குறித்து ஜப்பான் நாட்டுடன் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளமை வரவேற்கத்தக்கது.
ஒட்டுமொத்த மக்களையும் யாசகர்களாக்கி இந்திய யாசகர் இலங்கைக்கு நிவாரணம் வழங்கும் நிலைக்கு நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய ராஜபக்ஷர்கள் 'பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் திட்டம் எம்மிடம் உள்ளது'என்று குறிப்பிட்டுக் கொண்டு மக்கள் மத்தியில் செல்வது வேடிக்கையாகவுள்ளது. நாட்டை வங்குரோத்துக்கு தள்ளியவர்களால் எவ்வாறு பொருளாதார்தை மேம்படுத்த முடியும்.நாட்டு மக்கள் தெளிவாக சிந்திக்க வேண்டும்.
பொருளாதார பாதிப்புக்கு முன்னாள் பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ,பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோர் பொறுப்புக்கூற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.இவர்களுக்கு எதிராக இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.பொருளாதார பாதிப்புக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் இன்றும் சுதந்திரமாக உள்ளார்கள்.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஷவை களமிறக்கியதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.ஏனெனில் ஒட்டுமொத்த மக்களையும் யாசகர்களாக்கிய ராஜபக்ஷவின் குடும்பத்துக்கு தக்க பாடத்தை ஜனநாயக முறையில் புகட்ட வேண்டும்.ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவை படுதோல்வியடைய செய்து மக்கள் தமது வெறுப்பை வெளிப்படுத்த வேண்டும்.ராஜபக்ஷர்கள் 2022 ஆம் ஆண்டு மே 09 மற்றும் ஜூலை 09 காலப்பகுதியில் கற்றுக் கொள்ளாத படிப்பினையை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி கற்றுக்கொடுக்க வேண்டும்.
2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது பிரதான தனியார் ஊடகம் ஒன்று சிங்கள பௌத்தம்,இனவாதம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தியது. பாம்பை காண்பித்து பல விடயங்களை செய்தார்கள்.இவர்கள் மீண்டும் தேசியத்தை முன்னிலைப்படுத்தி செயற்பட முன்வந்துள்ளார்கள்.ஆகவே இவர்களுக்கும் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்றார்.