கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடு, உடமைகள் அனைத்தையும் இழந்துள்ளனர். அரசியல் கட்சிகள், தொழிலதிபர்கள், திரைபிரபலங்கள் உள்ளிட்டோர் நிவாரண நிதி அளித்து வருகின்றனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நடிகர் தனுஷ் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளார்.
வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து அதிபயங்கர நிலச்சரிவு கடந்த 29 ஆம் தேதி நள்ளிரவு 1 மணியளவில் ஏற்பட்டது. இதில், முண்டக்கை, மேப்பாடி, சூரல்மலை, வைத்திரி, வெள்ளேரிமலை, பொத்துகலு உள்ளிட்ட கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகள் அடித்து செல்லப்பட்டன. நூற்றுக்கணக்கான மக்கள் மண்ணோடு மண்ணாகப் புதைந்தனர். ஆயிரக்கணக்கானோர் தங்களது உறவினர்கள், வீடு, உடமைகள் என அனைத்தையும் இழந்தனர்.
வயநாட்டின் முண்டக்கை, சூரல்மலை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 150க்கும் மேற்பட்ட உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர், மாநில மீட்புப் படையினர் உள்ளிட்டோர் மீட்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். வயநாடு மாவட்ட மக்களின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டுள்ளது இந்த நிலச்சரிவு சம்பவம். நூற்றுக்கணக்கானோர் தங்களது உயிரையும், ஆயிரக்கணக்கானோர் தங்களது உறவுகள், வீடுகள், உடமைகள் என அனைத்தையும் இழந்து தவித்து வருகின்றனர். தொழிலதிபர்கள், தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள், தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் முன்னணி திரைபிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி அளித்து வருகின்றனர். பலர் நிவாரணப் பொருள்களை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நடிகர் தனுஷ் முதலமைச்சரின் பொதும நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் தொகையை வழங்கியுள்ளார்.
விக்ரம் ரூ. 20 லட்சம், ராஷ்மிகா மந்தனா ரூ. 10 லட்சம், சூர்யா, கார்த்தி, ஜோதிகா மூவரும் சேர்ந்து ரூ. 50 லட்சம், நயன்தாரா - விக்னேஷ் சிவன் ரூ. 20 லட்சம், மோகன்லால் 25 லட்சம், மம்முட்டி ரூ. 20 லட்சம், துல்கர் சல்மான் ரூ. 15 லட்சம் நிவாரண நிதியை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.