பாணந்துறையில் கனரக வாகனமும் துவிச்சக்கரவண்டியும் மோதியதில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி காயமடைந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பாணந்துறை பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகி 45 நிமிடங்கள் கடந்தும் வீதியால் சென்ற யாரும் உதவி செய்யாததால் குறித்த இளம் கர்ப்பிணிப் பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்து இடம்பெற்ற இடத்திலிருந்து 2 கிலோமீற்றர் தொலைவிலுள்ள பாணந்துறை வைத்தியசாலைக்கு கர்ப்பிணித் தாய் அழைத்துச் செல்லப்படாததால் அவரும் அவரது ஏழு மாதக் குழந்தையும் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பில் உயிரிழந்த பெண்ணுக்கு கற்பித்த ஆசிரியர் ஒருவர் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள பதிவொன்றில், “ஒரு குழந்தையின் தாயும் ஒரு மாணவியுமான பிரமோதா, டிப்பர் வாகனத்தில் மோதி விபத்தில் உயிரிழந்தார். இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு பாணந்துறையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று பார்த்த போது எனது இதயம் நொருங்கிப் போனது.
அவர் இறக்கும் போது ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தார், அவர் மடியில் குழந்தையின் சிறிய உடலைப் பார்த்தேன். அது தாங்க முடியாத வேதனை. மூத்த மகளை துவிச்சக்கரவண்டியில் பாலர் பாடசாலைக்கு அழைத்து வீடு திரும்பும் போது இந்த விபரீதம் நடந்துள்ளது.
விபத்து நடந்து சுமார் 45 நிமிடங்களுக்குப் பிறகும் 2 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பாணந்துறை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல யாரும் முன்வராததுதான் இங்கு மிகவும் அதிர்ச்சிகரமான காரணமாகும்
நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்லும் அந்த வீதியில் யாராவது முன்வந்து, மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருந்தால், அவரையும், குழந்தையின் உயிரையும் காப்பாற்றியிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கரவண்டி தரிப்பிடத்திற்கு அருகில் இடம்பெற்ற இந்த விபத்தை பார்த்து பலரும் புகைப்படம் மற்றும் காணொளி எடுத்துள்ளதுடன் வாகனங்கள் நிறுத்தி விட்டு நின்று பார்த்தனர்.
தங்களுக்கு பிரச்சினை ஏற்படாதவரை அடுத்த விடயங்களை சம்பவங்களாக பார்க்கும் மக்கள் மற்றும் வாகனத்தில் ஏற்றினால் இரத்த கறை ஏற்படும் என நினைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லையா? இல்லை என்றால் தேவையற்ற பிரச்சினை ஏற்படும் என நினைத்து அழைத்து செல்லவில்லையா? என என்னால் நினைத்துக்கூட பார்க்க முடிவில்லை. மனிதனே, உன் மனிதாபிமானத்தை எங்கே மறைத்தாய்?” என அவர் தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார்.