நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டங்கள் காரணமல்ல, நாட்டில் இருக்க முடியாது என்று கூறி வெளிநாடுகளுக்கு சென்றுள்ளவர்கள் அனுப்பிய பணமே காரணம் என தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (7) இடம்பெற்ற அரையாண்டின் அரசிரை நிலைப்பாட்டு அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டின் பொருளாதாரத்தை வீழ்த்திய நாங்களே நாட்டை மீட்டெடுத்தோம் என்பதனை போன்று அரச தரப்பினர் கதைக்கின்றனர். அன்று மத்திய வங்கி கொள்ளை நடந்த காரணத்தினாலேயே நாட்டில் எரிபொருள், எரிவாயு வரிசைகள் உருவாகின. அந்த கொள்ளை நடந்திருக்காவிட்டால் அந்த வரிசைகள் எதுவும் உருவாகியிருக்காது. பொருளாதார வீழ்ச்சியும் ஏற்பட்டிருக்காது. இந்நிலையில் வீழ்த்தியவர்களே நாட்டை மீட்டதாக கூறுவது வேடிக்கையாக உள்ளது.
அதேநேரம் தற்போது அந்நிய செலாவணி இருப்பு அதிகரித்துள்ளதாக கூறுகின்றனர். உண்மையில் அது ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார வேலைத்திட்டங்களால் அது அதிகரிக்கப்படவில்லை. கடந்த 2023 மற்றும் 2022இல் மாத்திரம் கிட்டத்தட்ட ஆறு இலட்சம் பேர் வரை இந்த நாட்டில் இருக்க முடியாது என்று நாட்டை விட்டுச் சென்றுள்ளனர்.
இவர்களும் இதற்கு முன்னர் சென்றவர்களுமாக 40 இலட்சம் பேர் வரையிலானோர் வெளிநாடுகளில் உள்ளனர். அவர்களால் அனுப்பப்பட்ட பணத்தின் மூலமே அந்நிய செலாவணி இருப்பு அதிகரித்துள்ளது. இந்த அரசாங்கம் மக்கள் நாட்டை விட்டு செல்லும் நிலைமையைதான் உருவாக்கியிருந்தது.
இந்நிலையில் இந்த அரசாங்கம் எமது அரச சொத்துக்களை விற்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது. டெலிகொம் நிறுவனம் நஷ்டம் என்று கூறி சூசகமாக விற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதனை விற்பதற்கு மக்கள் இடமளிக்க மாட்டார்கள். இது தொழில்நுட்பம் மட்டுமன்றி எமது பாதுகாப்புடனும் தொடர்புடையது. அதனால் இதனை விற்க இடமளிக்கக்கூடாது.
அதேபோன்று ஹில்டன் ஹோட்டலையும் விற்க முயற்சிக்கின்றனர். பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நிறுவனங்களை விற்கும் திட்டங்களை முன்னெடுக்கின்றனர். தேர்தல் வரை மக்கள் காத்திருக்கின்றனர். இன்னும் 46 நாட்களில் மக்கள் புதிய பாதையை தெரிவு செய்வார்கள் என்றார்.