ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நெலும் மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுனவின் தலைமை அலுவலகத்தில் இன்று புதன்கிழமை (07) காலை இடம்பெற்ற விசேட நிகழ்வின் போதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்வில் மஹிந்த ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ , ஜொன்ஸ்டன் பெர்னாண்டொ மற்றும் ஜயந்த கொடகொட உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.
ஜனாதிபதி வேட்பாளர் போட்டியிலிருந்து தம்மிக பெரேரா விலகுவதாக உத்தியோகப்பூர்வமாக அறிவித்ததை தொடர்ந்து பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக நாமல் ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார். எனினும் அந்த கட்சியின் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அதரவளித்து வருகின்றனர்.
இதன் பிரகாரம், இரத்தினப்புரி, பொலன்னறுவை மற்றும் அம்பாறை உட்பட மேலும் சில மாவட்டங்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர். குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி ரணிலுக்கும் இடையில் நேற்று செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.
கடந்த பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்திற்கு தெரிவான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உட்பட 9 கட்சிகளை சேர்ந்த 102 பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுவரையில் உத்தேச ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் தீர்மானத்தை வெளிப்படையாக அறிவித்துள்ளனர். இந்த 102 பேரில் 70 பேர் பொதுஜன பெரமுனவை சார்ந்தவர்கள் ஆவர். மேலும் தமிழ் மக்கள் விடுதலை முன்னணி, தேசிய காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர். இதனடிப்படையில் இந்த கட்சிகளை பிரதிநிதித்துவம் செய்யும் 13 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு ஜனாதிபதி ரணிலுக்கு கிடைக்கப்பெறுகிறது.
இதே போன்று கடந்த பாராளுமன்ற தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் 12 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இதில் 8 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்கின்றனர். ஒருவர் மாத்திரம் நாமல் ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க போவதாக தெரிவித்துள்ளதுடன், இருவர் சர்வஜன கட்சியின் உள்ளனர். அத்துடன் விஜேதாச ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட உள்ளார். இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் 13 பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுஜன பெரமுன சார்பில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தெரிவானார்கள். இதில் 9 பேர் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்கின்றனர். இருவர் நாமல் ராஜபக்ஷவுடன் இருப்பதுடன், மற்றுமொருவர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார். ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே இதுவரையில் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வில்லை.
களுத்துறை மாவட்டத்தை எடுத்துக்கொண்டால், பொதுஜன பெரமுன சார்பில் 8 பேர் கடந்த பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்திற்கு தெரிவானார்கள். இதில் 5 பேர் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்கும் தீர்மானத்தை அறிவித்துள்ளனர். தேசிய சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர சர்வஜன சக்தியில் இணைந்துள்ளார். மேலும் பொதுஜன பெரமுனவில் தெரிவான பாராளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளதுடன், பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான தொடர்ந்தும் நாமல் ராஜபக்ஷவுடன் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்.
பொதுஜன பெரமுன சார்பில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் கண்டி மாவட்டத்தில் தெரிவான 8 பாராளுமன்ற உறுப்பினர்களில், ஒருவரை தவிர ஏனைய அனைவரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர். மாத்தளை மாவட்டத்தில் தெரிவான 4 பாராளுமன்ற உறுப்பினர்களுமே ரணில் விக்கிரமசிங்கவுக்கான ஆதரவையே வெளிப்படுத்தியுள்ளனர். மறுபுறம் நுவரெலியா மாவட்டத்தில் தெரிவான 5 பாராளுமன்ற உறுப்பினர்களும் ரணிலுக்கே ஆதரவை வெளிப்படுத்துகின்றனர்.
காலி மாவட்டத்தில் 7 பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுஜன பெரமுன சார்பில் தெரிவானார்கள். இதில் 3 உறுப்பினர்கள் ரணிலுக்கு ஆதரவளிப்பதுடன், ஷான் விஜேலால் டி சில்வா மற்றும் சந்திம வீரக்கொடி ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளனர். இசுரு தொடங்கொட பொதுஜன பெரமுனவில் தொடர்ந்தும் செயல்படுகின்றார். ஆரம்பத்தில் ரணிலுக்கு அதரவளித்த மொஹான் டி சில்வா மீண்டும் பொதுஜன பெரமுனவில் இணைந்து காலி மாவட்டத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ளார். மறுபுறம், ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவம் செய்த மனுஷ நாணயக்கார, ரணிலுக்கு ஆதரவளிக்கின்றார்.
மாத்தறை மாவட்டத்தில் பொதுஜன பெரமுன சார்பில் 6 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவானார்கள். மஹிந்த யாபா அபேவர்தன சபாநாயகராக உள்ளார். டலஸ் அழகப்பெரும மற்றும் கருணாதாச கொடிதுவக்கு ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளனர். வீரசுமன வீரசிங்க சர்வஜன சக்தியில் இணைந்துள்ளார். காஞ்சன விஜேசேகர ரணிலுக்கு ஆதரவளிக்கின்றார்.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் 6 பாராளுமன்ற உறுப்பினர்கள் மொட்டு கட்சி சார்பில் தெரிவானார்கள். இதில் மஹிந்த அமரவீர மற்றும் அஜித் ராஜபக்ஷ ஆகியோர் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்கின்றனர். அந்த மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற நாமல் ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ மற்றும் டி.வி. சானக ஆகியோர் பொதுஜன பெரமுனவின் வேட்பாளருக்கு ஆதரவளிக்க போவதாக அறிவித்துள்ளனர். எஞ்சியிருந்த உபுல் கலப்பத்தி ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார்.
யாழ் மாவட்டத்தின் டக்ளஸ் தேவானந்தா, சுரேன் ராகவன், வன்னி மாவட்டத்தின் காதர் மஸ்தான், குலசிங்கம் திலீபன் ஆகியோர் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்கின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களான சதாசிவம் வியாழேந்தின் மற்றும் சிவநேசத்துறை சந்திரகாந்தன் ஆகியோரும் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்கின்றனர்.
மொட்டு கட்சி சார்பில் திகாமடுல்ல ( அம்பாறை மாவட்டம்) தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 3 ஆகும். இதில் விமலவீர திஸாநாயக்க, ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கின்ற நிலையில், திலக் ராஜபக்ஷ ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார். டீ. வீரசிங்க நாமல் ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கின்றார். இதனை தவிர ஏ.எல்.எம். அதாவுல்லா மற்றும் எஸ்.எம்.எம். முஷாரப் ஆகியோர் ரணிலுக்கு ஆதரவளிக்கின்றனர்.
குருநாகல் மாவட்டத்தில் மொட்டு கட்சி சார்பில் 11 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவானார்கள். இதில் ஐவர் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்கின்றனர். தயாசிறி ஜயசேகர மற்றும் வை.ஜி. ரத்னசேகர ஆகியோர் மொட்டு கட்சியிலிருந்து வெளியேறி ஏனைய கட்சிகளில் அரசியல் நடவடிக்கைளில் ஈடுப்படுகின்றனர். மஹிந்த ராஜபக்ஷ பொதுஜன பெரமுனவின் தலைவராக உள்ளார். அநுர பிரியதர்ஷன யாபா லன்சா குழுவில் இணைந்துள்ளார். இந்த குழு ஜனாதிபதி ரணிலுக்கே ஆதரவளிக்கின்றது.
புத்தளம் மாவட்டத்தில் மொட்டு கட்சி சார்பில் 5 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவானார்கள். இதில் 4 பேர் ஜனாதிபதி ரணிலுக்கே ஆதரவளிக்கின்றனர். அலி சப்ரி ரஹீம் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஏற்கனவே அறிவித்துள்ளார். அனுராதபுரம் மாவட்டத்தில் பொதுஜன பெரமுனவைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்துக்கு தெரிவான 7 பேரில் 5 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளித்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியூடாக பாராளுமன்றத்துக்கு தெரிவான இஷாக் ரஹ்மானும் காலியில் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து கொண்டார். பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் நால்வரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கின்றனர்.
பதுளையில் 6 பொதுஜன பெரமுன எம்.பி.க்கள் உள்ளனர். அவர்களில் மூவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிப்பதுடன், ஐக்கிய மக்கள் சக்தியின் 3 எம்.பி.க்களும் தேர்தலில் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மொனராகலை மாவட்டத்திற்கு பொதுஜன பெரமுனவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 5 ஆகும். அவர்களில் 4 பேரின் ஆதரவு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு உள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் பொதுஜன பெரமுனவிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 8 பாராளுமன்ற உறுப்பினர்களில் ஐவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்துள்ளனர். இரத்தினபுரி மாவட்ட தலைவர் பவித்ரா வன்னியாராச்சி இரட்டை நிலைப்பாட்டில் இருக்கின்றார்.
வாசுதேவ நாணயக்கார சுகவீனம் காரணமாக அரசியலில் ஈடுபடுவதில்லை. பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் பதவியை கோரியுள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலில் கேகாலை மாவட்டத்தில் 7 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். அந்த மாவட்டத்தில் ஜனாதிபதிக்கு 6 எம்.பி.க்களின் ஆதரவு காணப்படுகிறது.
பொதுஜன பெரமுனவின் 17 தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களில் 10 பேர் தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் உள்ளனர். மேலும் மூவர் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டில் இருந்தாலும் இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.