ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் யார் என இன்னும் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை என தமிழ் மக்கள் பொதுச்சபையின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
யாழில் (jaffna) உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (5.8.2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
தெரிவு செய்யப்பட்ட இரு வேட்பாளர்களில் இறுதியாக ஒருவரின் பெயரை தெரிவு செய்வதில் நீண்ட விவாதங்கள் இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலில் தமிழக விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adhikalanathan), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் (Suresh Premachandran), தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ந.ஸ்ரீகாந்தா, தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் மற்றும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன், அரசியல் ஆய்வாளர்களான நிலாந்தன், யதீந்திரா, அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன் உள்ளிட்ட இன்னும் சிலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்போது இரண்டு வேட்பாளர்களின் பெயர்கள் இருப்பதாகவும் அதில் ஒருவர் எதிர்வரும் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை இறுதியாக அறிவிக்கப்படுவார் என தமிழ் மக்கள் பொதுச்சபையின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.