ஜனாதிபதி தேர்தலில் வெற்றி வாய்ப்புக்கள் முன்னேற்றகரமான நிலையை அடைந்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் அரசியல் பிரமுகர் ஒருவரிடத்தில் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்கு பல்வேறு சந்திப்புக்களில் பங்கேற்றிருந்த நிலையில் தமிழ் அரசியல் பிரமுகர் ஒருவருடன் பிரத்தியேகமான கலந்துரையாடலில் ஈடுபட்டபோதே அவர் மேற்கொண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பு குறித்து மேலும் தெரியவருகையில்,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பிரமுகருக்கும் இடையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தி காணப்படுகின்ற கள நிலைமைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இச்சமயத்தில் பெரமுனவின் உறுப்பினர்கள் 92 பேர் சுயாதீனமாக தன்னை ஆதரிப்பதற்கு எடுத்த தீர்மானத்தினால் வெற்றிக்கான வாய்ப்புக்கள் முன்னேற்றகரமாக உள்ளன என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தமிழ் பொது வேட்பாளர் தொடர்பிலும் ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். அச்சமயத்தில், இந்த பிரமுகர் தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் நிச்சயமாக நிறுத்தப்படப்போகின்றார். எனினும் அவ்வேட்பாளரால் பெரியளவில் ஜனாதிபதி ரணிலுக்கு பிரச்சினைகள், வாய்ப்புக்கள் இல்லை என்ற தொனிபடப் பதிலளித்துள்ளார்.
அதேநேரம், பொதுவாக தமிழ் மக்களின் மனநிலை எவ்வாறுள்ளது என்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் அறிவதற்கு அதிகளவில் ஆர்வம் காண்பித்துள்ளார்.
மேலும், சுமந்திரனுடன் நடத்திய உரையாடலின்போது மாகாண சபைகளுக்கான தேர்தலை முன்னெடுப்பதற்கான முட்டுக்கட்டையை நீக்குதல், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவுதல் உள்ளிட்ட விடயங்கள் பேசப்பட்டதாகவும் அவற்றின் விபரங்களையும் குறித்த பிரமுகருடன் பகிர்ந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.