தன்னை கனடாவுக்கு வரவழைத்த தன் மனைவியை கொடூரமாக கொலை செய்தார் இந்தியர் ஒருவர்.
அவரால் குடும்பமே குலைந்துபோனதாக கருத்து தெரிவித்துள்ளார் வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி.
1999ஆம் ஆண்டு, இந்தியாவில் கமல்ஜீத் சிங் என்ற பெண்ணுக்கும், இந்தர்ஜீத் சிங் சந்து என்பவருக்கும் திருமணம் நிகழ்ந்தது.
கமல்ஜீத் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Abbotsford நகரில் வாழ்ந்துவந்த நிலையில், இந்தர்ஜீத் கனடாவுக்கு புலம்பெயர்வதற்கு ஸ்பான்சர் செய்தார் அவர். தம்பதியருக்கு முறையே 23 மற்றும் 18 வயதுடைய இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.
இருவருக்கும் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் உருவான நிலையில், கணவர் தன்னைத் தாக்கவும் துவங்க, ஒரு கட்டத்தில் கணவரை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார் கமல்ஜீத்.
ஏற்கனவே உடல் ரீதியாகவும் மனோரீதியாகவும் மனைவியைத் தாக்கியிருந்தும், அவர் தன்னை விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளதை அறிந்த இந்தர்ஜீத் ஆத்திரமடைந்துள்ளார்.
2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28ஆம் திகதி, தன் மனைவி கமல்ஜீத்தைக் கொலை செய்துவிட்டார் அவரது கணவர்.
திட்டமிட்டு, கத்தி வாங்கி வைத்துக்கொண்டு, தான் தங்கியிருந்த தன் பெற்றோர் வீட்டுக்கு மனைவியை வரவழைத்த இந்தர்ஜீத், அவர் எதிர்பாராத நேரத்தில் அவரை கத்தியால் தாக்கியுள்ளார்.
இந்தர்ஜீத்தின் தாய் வந்து மகன் கையிலிருந்த கத்தியைப் பிடுங்கியும், கத்தியால் குத்தப்பட்டு இரத்தம் சொட்டும் நிலையிலிருந்த கமல்ஜீத்தை தன் கையாலேயே கழுத்தை நெறித்துக்கொன்றுள்ளார் இந்தர்ஜீத்.
இந்தர்ஜீத்துக்கு, 13 ஆண்டுகளுக்கு ஜாமீன் கிடைக்காத வகையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தீர்ப்பளித்த நீதிபதியான Dev Dley கூறியுள்ள வார்த்தைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
கமல்ஜீத்தின் மரணம், அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அளவிடமுடியாத துன்பத்தையும் மன அழுத்தத்தையும் வலிமிக்க இழப்பையும் அளித்துள்ளதை மறுக்க இயலாது, இந்தர்ஜீத்தின் செயலால் குடும்பமே சிதறிப்போய்விட்டது, என்று கூறியுள்ளார் நீதிபதி Dev Dley.
இந்தர்ஜீத்தின் சுயநலத்தாலும், முன்பின் யோசிக்காமல் மேற்கொண்ட வன்முறையாலும், தாங்கள் அன்பும் பாசமும் வைத்திருந்த தாயை பிள்ளைகள் இழந்துவிட்டார்கள்.
இந்தர்ஜீத்துடைய பெற்றோர் இந்தியாவுக்குத் திரும்பிவிட்டார்கள். அவரது நண்பர்களும் சக ஊழியர்களும் அவரை ஒதுக்கிவிட்டார்கள். அவருடைய பிள்ளைகள் அவருடைய வாழ்வில் எந்த பங்கும் வகிக்க விரும்பவில்லை. இந்தர்ஜீத் இனி தன் வாழ்வை தனிமையில்தான் செலவிடவேண்டும் என்று கூறியுள்ளார் நீதிபதி.