கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரித்தமைக்காக மன்னிப்புக் கோரும் தீர்மானத்திற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ள விவகாரம் தற்போது தேசிய அரசியலில் மிகுந்த கவனயீர்ப்பைப் பெற்றுள்ளது.
முதன் முறையாக அரசாங்கம் எத்தனை முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டன என்ற உத்தியோகபூர்வ எண்ணிக்கையையும் வெளியிட்டுள்ளது. இதற்கமைய மொத்தமாக 276 ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டுள்ளன. இது ஏறத்தாள உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கைக்குச் சமனானதாகும்.
நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட இரண்டு வெவ்வேறான ஆய்வுகளில் கண்டறியப்பட்டதற்கமைவாகவே நிலத்தடி நீர் மூலம் கொவிட் வைரஸ் பரவாது என்ற உண்மையை இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக நிறுவியுள்ளது. அதற்கமைவாகவே தற்போது கட்டாயமாக தகனம் செய்யப்பட்டமைக்காக முஸ்லிம்களிடம் மன்னிப்பும் கோரியுள்ளது.
தவறை உணர்ந்து மன்னிப்புக் கோருவது வரவேற்கத்தக்க விடயம் என்ற போதிலும் இங்கு இடம்பெற்றிருப்பது தவறு அல்ல. மாறாக வேண்டுமென்றே முஸ்லிம்களைப் பழி தீர்க்க எடுக்கப்பட்ட தீர்மானமே கட்டாய தகனக் கொள்கை என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது. அந்த வகையில் இத்தீர்மானத்தை எடுப்பதற்கு காரணமாகவிருந்த நிபுணர் குழு இது விடயத்தில் எவ்வாறு பொறுப்புக்கூறலுக்கு உள்ளாக்கப்படும் என்ற கேள்விக்கு அரசாங்கம் பதில் தர வேண்டியது அவசியமாகும்.
அந்த வகையில் மன்னிப்புக்கோருவதுடனும் புதிய சட்டத்தை இயற்றுவதன் மூலமும் இக் கொடூர செயலுக்குப் பின்னணியின் இருந்தவர்கள் தப்பித்துவிடமுடியாது. மாறாக அவர்களது விபரங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டு அவர்களுக்கு எதிராக குற்றவியல் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தினதும் கட்டாய தகனக் கொள்கைக்கு எதிராகப் போராடியவர்களினதும் கோரிக்கையாகும்.
மன்னிப்புக்கு அப்பால் சில சமயங்களில் நஷ்டயீடு வழங்கி விடயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் அரசாங்கம் முனையலாம். அதற்கும் முஸ்லிம் சமூகம் இணங்கலாகாது. எத்தனை கோடி ரூபா பணத்தை தந்தாலும் அதன் மூலம் தீயினால் எரித்த வலியை மறக்கடிக்கலாகாது. 20 வயதுப் பாலகனை எரித்தவர்களிடம் அவர்கள் செய்த தவறுக்காக கை நீட்டிப் பணம் வாங்குவதை நினைத்துப் பார்க்க முடியுமா? நமது உறவுகளின் சடலங்களை எரித்த குற்றத்துக்குப் பகரமாக பணத்தைப் பெற்று அதில் நாம் வாழவும் முடியாது.
எனவேதான் முஸ்லிம் சமூகத்தின் சார்பில் அரசாங்கத்தின் மன்னிப்புக் கோரும் தீர்மானம் தொடர்பான பகிரங்க பதில் முன்வைக்கப்பட வேண்டும்.
மன்னிப்புக் கோரியதை வரவேற்கின்ற அதேநேரம் கட்டாய தகனம் எனும் தீர்மானத்தை எடுப்பதற்குக் காரணமாக இருந்தவர்களை சட்டத்தின் முன்நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு முஸ்லிம் தரப்பு பகிரங்கமாக வலியுறுத்த வேண்டும். இதில் அரசியல் கட்சிகள், சிவில் சமூக நிறுவனங்கள், உலமாக்கள் என சகலரும் கைகோர்த்துச் செயற்பட வேண்டும்.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் நேற்றைய தினம் இது தொடர்பில் தமது கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தனர். இது விடயத்தில் தேவையான அரசியல் சக்திகளின் ஒத்துழைப்பையும் பெற்று முஸ்லிம் சமூகம் தனது நீதிக்கான போராட்டத்தை முன்கொண்டு செல்ல வேண்டும்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான காலம் நெருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் தனது வாக்குப்பலத்தை வைத்து பேரம்பேசுவதற்கான சிறந்த தருணம் இதுவேயாகும். வழக்கம் போல முஸ்லிம் அரசியல் கட்சிகள் நமது வாக்குகளை அவர்களது சுயநலன்களுக்காக அடகுவைக்க இம்முறை இடமளிக்க முடியாது என்பதையும் நினைவுபடுத்த விரும்புகிறோம்