இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கொழும்பு, ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று ஆரம்பமாகவுகவுள்ள 3 போட்டிகளைக் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின்போது இலங்கை அணிக்கு உற்சாகமூட்டி ஆதரவு வழங்க உள்ளூர் இரசிகர்களைத் திரண்டு வருமாறு இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமைப் பயிற்றுநர் சனத் ஜயசூரிய அழைப்பு விடுத்தார்.
இற்றைக்கு பல்லாண்டுகளுக்கு முன்னர் தங்களது அர்ப்பணிப்புத்தன்மை, ஆட்டத்திறன் ஆகியவற்றின் மூலம் இரசிகர்கள் மத்தியில் கிரிக்கெட் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்து கிரிக்கெட்டையும் கிரிக்கெட் வீரர்களையும் நேசிக்கும் சூழ்நிலையை உருவாக்கியதாகவும் அதேபோன்று சமகால வீரர்களும் அர்ப்பணிப்புடன் விளையாடி இரசிர்களைக் கவரவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
பல்லேகலையில் நடைபெற்ற சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் இலங்கையை 3 - 0 என்ற ஆட்டக்கணக்கில் இந்தியா முழுமையாக வெற்றிகொண்டிருந்தது. அந்த மூன்று போட்டிகளிலும் மத்திய வரிசை துடுப்பாட்டம் கிடுகிடுவென சரிந்ததால் இலங்கை தோல்விகளைத் தழுவ நேரிட்டது.
கடைசிப் போட்டியில் இலங்கையின் வெற்றிக்கு கடைசி 2 ஓவர்களில் 9 ஓட்டங்கள் மாத்திரம் தேவைப்பட்டதுடன் 6 விக்கெட்கள் மீதம் இருந்தது. ஆனால், சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் முதல் தடவையாக பந்துவீசிய ரின்கு சிங் (19ஆவது ஓவர்), சூரியகுமார் யாதவ் (20ஆவது ஓவர்) ஆகிய இருவரும் முறையே 3 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும், 5 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தி ஆட்டத்ததை சமநிலையில் முடிக்க உதவினர்.
தொடர்ந்து சுப்பர் ஓவரில் இந்தியா வெற்றிபெற்றது. சுப்பர் ஓவரிலும் துடுப்பாட்ட வீரர்கள் விக்கெட்களைத் தாரைவார்த்ததால் இரசிகர்கள் கூச்சல் போட்டு ஏளனம் செய்தனர். இந்த சூழ்நிலையானது தவிர்க்க முடியாதது எனவும் இரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தார்கள் எனவும் சனத் ஜயசூரிய குறிப்பிட்டார்.