சர்வதேச நாயண நிதியத்திடம் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தினார்.
இந்த உரையின் இறுதியில் மறைந்த தலைவர் இரா.சம்பந்தனை நினைக் கூறும் வகையில் சில கருத்துகளையும் அவர் வெளியிட்டிருந்தார்.
ஜனாதிபதி தமது உரையில்,
”நானும் இரா.சம்பந்தனும் ஒரே காலகட்டத்தில் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியிருந்தோம் என்பதுடன், இருவரும் மிகவும் இக்கட்டான காலகட்டத்திலேயே பணியாற்றியிருந்தோம். அவர் வழங்கிய ஒத்துழைப்புகள் என்னவென எனக்குத் தெரியும்.
தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (TULF) மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு (TNA) ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்திய போதிலும், அவர் எப்போதும் இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாட்டிற்காக பங்காற்றினார்.
ஒரு சிறுவனமாக சுதந்திர தின கொண்டாட்டங்களை பார்க்கச் சென்ற நான், நாட்டை பிரிக்க முற்படுவேன் என்று நினைக்கிறீர்களா ரணில்? எனக் கேட்டார்.
அதனைக் காணும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைக்கவில்லை. நம்மில் பலர் அப்போது பிறக்கவே இல்லை. ஆனால் அதிகாரப் பகிர்வு தொடர்பில் அவர் தனித்துவமான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்.
அதைப் பற்றி விவாதம் செய்ய அவசியமில்லை. அவர் அதற்கான போதுமான பங்கை செய்துள்ளதாக நினைக்கிறேன். அதனை நிறைவு செய்ய இன்னும் கொஞ்சம் பங்காற்ற வேண்டியுள்ளது. மேலும் அந்த வேலைகளை நிறைவு செய்வதே அவருக்கு செய்யக்கூடிய மிக உயர்ந்த பங்களிப்பாக இருக்கும்.” என்றார்