நாச்சியாதீவு பர்வீன்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் 33 ஆவது பேராளர் மாநாடு எதிர்வரும் 22.06.2024 சனிக்கிழமை அன்று காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமின் தலைமையில் நடைபெறவுள்ளது. காத்தான்குடிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் நீண்ட நெடுங்கால தொடர்பும் வரலாறும் இருக்கின்றது என்ற வகையில் முஸ்லிம் காங்கிரஸ் மூலமாக அரசியல் அடையாளம் பெற்று பின்னர் முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிரான பாசறைகளில் அரசியல் செய்து மீண்டும் தாய்க்கட்சியோடு இணைந்து செயற்பட வந்துள்ள ஹிஸ்புல்லாஹ்வின் மீள்வருகையை கட்டியம் கூறும் நிகழ்வாகவும் இந்த பேராளர் மாநாடு அமைந்துள்ளதோ என்றும் எண்ணத்தோன்றுகிறது. ஹிஸ்புல்லாஹ்வின் மீள்வருகையில் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதி தலைவர்களில் ஒருவர் அலி சாஹிர் மௌலானா, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் யூ.எல்.முபீன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அடிமட்ட போராளிகளின் பெருந்தன்மை இங்கு கவனத்தில் கொள்ளப்படவேண்டிய ஒரு விடயமாகும். அத்தோடு மீண்டும் அவர் கட்சியை பிளவுபடுத்திவிட்டுச் சென்றுவிடாமல் இருக்கவேண்டும்.
பேராளர் மாநாடுகள் வெறுமனே ஒரு கட்சியின் இருப்பை காட்டிக்கொள்வதற்காக அல்லது பத்தோடு பதினொன்றாக நாங்களும் ஒரு தேசிய கட்சிதான் என்பதை காட்டுவதற்காக நடைபெறுவதுண்டு. ஆனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாடுகள் பொதுவாகவே மேற்சொன்ன கண்துடைப்புகளை தாண்டிய அல்லது அதற்கு அப்பாற்பட்ட செயற்பாடுகளைக் கொண்டது என்பதனை கடந்த காலங்களில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாடுகளை அவதானிக்கும் போது தெரிந்துகொள்ள முடியும்.
இன ரீதியான கட்சியொன்று முஸ்லிம்களுக்கு தேவையில்லை என்று அவ்வப்போது சிலர் சொல்வதையும், எழுதுவதையும் அவதானிக்க முடிகிறது. ஆனால் மிக நீண்ட கால வரலாற்றை கொண்ட தமிழரசு கட்சி மற்றும் சிங்கள இனரீதியாக உருவாக்கப்பட்ட சிஹல உறுமய, ராவணா பல வேகய, பொதுபல சேனா அமைப்பினரின் கட்சி போன்றவற்றை இவ்வாறு கருத்துச்சொல்பவர்கள் வசதியாக மறந்து போய்விடுகின்றனர். யார் என்ன சொன்னாலும் சிறுபான்மையினரின் நலனோம்பும் விடயங்களில் அந்த இனம் சார்ந்த ஒரு கட்சியின் அவசியத்தை கடந்த கால வரலாறுகள் நினைவுபடுத்துகின்றன.
பன்முக கலாசாரத்தையும், பல்லின இனக்குழுமத்தையும் கொண்ட ஒருநாட்டில் பெரும்பான்மை சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் செயற்பாடுகளே சிறுபான்மை கட்சிகளின் அவசியத்தையும், தேவைப்பாடுகளையும் தீர்மானிக்கின்றன எனலாம். அந்தவகையில் இலங்கையில் இரண்டாவது சிறுபான்மையான முஸ்லிம் சமூகத்திற்கான தனியான ஒரு கட்சியின் தேவைப்பாடு உணரப்பட்ட ஒன்றுதான். அதனை உணர்ந்தே பெருந்தலைவர் அஷ்ரப் இக்கட்சியை உருவாக்கினார் எனலாம்.
பெருந்தலைவர் அஷ்ரப் அவர்களின் நேரிய சிந்தனை மற்றும் சமூகத்தின் மீதான அளவுகடந்த பற்று இன்னும் சொல்லப்போனால் சிறுபான்மை சமூகமொன்றினாலேயே ஒடுக்கப்படுகின்ற, அடக்கப்படுகின்ற ஒரு அநாதை சமூகமாக வாழ்ந்த முஸ்லிம் சமூகத்திற்கு அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் பெற்றுத்தருகின்ற ஒரு அமைப்பாகவே இன்று பெரும் விருட்சமாக வளர்ந்து கிளை பரப்பி நிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் பேரியக்கத்தை தோற்றுவித்தார். பெருந்தலைவர் அஷ்ரபின் காலத்தில் மிகவும் கட்டுக்கோப்பாகவும், வீரியமாகவும் இந்த இயக்கம் இயங்கியது என்பதை யாராலும் மறுக்கமுடியாது. அந்த ஆளுமையின் முன்னால் உயர்பீட உறுப்பினர்கள் மிகுந்த மரியாதையோடும், கட்சியின் போராளிகள் மிகுந்த பக்தியோடும் செயற்பட்டார்கள். பெருந்தலைவர் அஷ்ரப் இன்று வரைக்கும் தேசிய மட்டத்தில் பேசப்படுவதற்கான பிரதான காரணம் அவரிடம் இருந்த தலைமைத்துவப் பண்பும், ஆளுமையும் ஆகும். எப்போதுமே அடிமை சமூகமாக வாழுகின்ற சமூகத்தை தனித்துவத்தோடு வாழும் கௌரவமிக்க சமூகமாக வாழுகின்ற ஒரு நிலையை உருவாக்குவதே அவரது கனவாக இருந்தது. ஒரு சமூகத்தின் குரலாக சர்வதேசம் வரைக்கும் இந்த சமூகத்தின் தேவைகளை அவலங்களை எடுத்துச்சென்று அடையாளப்படுத்தினார். இந்த சமூகம் பற்றிய அவரது கனவு மிகப்பெரியதாகும்.
பெருந்தலைவரின் அகால மரணத்தின் பின்னர் பெருந்தலைவரால் அடையாளப்படுத்தப்பட்ட, அவரின் அருகாமையிலேயே அவரது ஆசுவாசத்துடன் கலந்து வாழ்ந்த இன்றைய தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு அந்த இடம் கிடைத்தது எனலாம். பெருந்தலைவரின் காலத்தில் எதிரிகள் மறைந்திருந்தார்கள்.
தலைவரிடம் அகப்பட்டுக்கொள்வோமோ என்ற பயத்தில் பம்மிக்கொண்டு இருந்தனர். ஆனால் தலைவர் ரவூப் ஹக்கீமின் காலத்தில் எல்லாப்புறத்திலுமிருந்து வெட்டும், குத்தும், குழிபறிப்பும் இன்னும் கட்சியையும் தலைமையையும் எவ்வாறான வகையில் பலவீனப்படுத்த முடியுமோ அதற்கான எல்லா முஸ்தீபுகளும் மேற்கொள்ளப்பட்டன . உண்மையில் பெருந்தலைவர் காலத்தில் இல்லாத பிரச்சினைகள் கட்சிக்குள் எழுவதற்கு பிரதான காரணம் பதவி ஆசை, தலைமைத்துவ ஆசை, பொறாமை என்பனவாகும். எத்தனை சவால்கள் வந்த போதும் அதனை சாணக்கியமாக கையாளுகின்ற சிறந்த ஆளுமையாக ரவூப் ஹக்கீம் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார். அதற்காக ரவூப் ஹக்கீம் விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட ஒருவர் என்று யாரும் பிழையாக மொழிபெயர்த்துவிட வேண்டாம்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாடுகளை பெருந்தலைவர் கட்சியின் தொண்டர்களை போராளிகளை வலுவூட்டும் ஒரு நிகழ்வாகவும் கட்சியின் தலைமைக்கும் கட்சியின் போராளிகளுக்கும் இடையிலான இடைத்தொடர்பை வளர்க்கின்ற நிகழ்வாகவும் பிராந்தியத்தில் கட்சிக்கான தலைவர்களை இனங்கண்டு அவர்களுக்கும் கட்சிக்கும் இடையிலான உறவை மேம்படுத்தும் நிகழ்வாகவும் நடாத்தி அதில் வெற்றியும் பெற்றார். அந்தவகையில் தேசிய ரீதியாக இயங்கும் ஒவ்வொரு கட்சிக்கும் பேராளர் மாநாடொன்றின் அவசியம் உணரப்பட்டுள்ளது. அது அந்த கட்சின் இருப்பை உறுதிப்படுத்தவும், அந்த கட்சியின் போராளிகளை வலுப்படுத்தவும் ஏதுவாக அமையும்.
மேற்சொன்ன வரையறைகளை கருத்திற்கொண்டு நாம் நோக்கும் போது தேசியத்தில் பெரும்பான்மையான முஸ்லிம்களின் ஆதரவைப்பெற்ற ஒரு தேசிய கட்சி என்ற வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இந்த பேராளர் மாநாடு அவசியமாகின்றது. அத்தோடு அது பெருந்தலைவர் அஷ்ரபின் அபிலாஷைகளை உள்ளடக்கியதாக அல்லது அவரது கனவை நனவாக்கும் பாதையில் செல்கிறதா என்று ஆராயும்போது அதற்கும் ஒரு சாதகமான பதிலையே பெற்றுக்கொள்ள முடிகிறது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஒவ்வொரு பேராளர் மாநாடும் அதன் போராளிகளை மையமாக வைத்தே நடாத்தப்படுகிறது. ஏனைய தேசிய கட்சிகளையும்விட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பலமும் பலவீனமும் அதன் போராளிகள்தான். கட்சிக்குள் முரண்பாடுகள் எழுகின்ற போதும் வெளியே இருந்து சவால்கள் எழுந்த போதுகளிலும் தலைமைக்கு பக்கபலமாக இருந்து தலைமையையும், கட்சியையும் பாதுகாத்த பெரும் சக்தியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் போராளிகளை கடந்த காலத்தில் கண்டுள்ளோம்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் போராளிகளுக்கும் கட்சியின் உயர்பீடத்திற்கும் இடையிலான இடைத்தொடர்பு இன்னும் ஆரோக்கியமாக இல்லை. அத்தோடு தேர்தல் காலத்தில் மட்டுமே கட்சியின் புனரமைப்பு தொடர்பில் கரிசனை கொள்ளப்படுகிறது, பழைய போராளிகள் புறக்கணிக்கப்படுத்தல் போன்ற சில குற்றச்சாட்டுக்கள் கட்சியின் மீது வைக்கப்படுகின்றன.
இவற்றில் உண்மை இல்லாமலும் இல்லை. ஆனால் மாவட்ட அமைப்பாளர்கள், தொகுதி அமைப்பாளர்கள், வட்டார அமைப்பார்கள் இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளனர்.
சிறுபான்மை சமூகமொன்றுகான தனித்துவமான கட்சியொன்றின் தேவைப்பாட்டை சஹ்ரான் என்ற காட்டுமிராண்டியின் அந்த மிலேச்சத்தனமான உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகம் அனுபவித்த அவலங்களையும், அவமானங்களையும் நேரடியாக அனுபவித்தபோது உணரமுடிந்தது. பெயரில் மட்டுமே முஸ்லிம் அடையாளத்தை தாங்கியிருந்த சஹ்ரான் இஸ்லாத்தில் இல்லாத கொடூரம் ஒன்றை அரங்கேற்றிய சந்தர்ப்பத்தில் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் குற்றவாளிக்கூண்டில் ஏற்றி கேள்வி கேட்டனர். இந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில் தமது அமைச்சுப்பதவிகளை துறந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓரணியில் இருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமின் தலைமையில் இணைந்து அதற்கு முகம் கொடுத்தனர். இதன் மூலம் சஹ்ரான் என்ற தீவிரவாதிக்கும் அமைதியை போதிக்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித தொடர்புமில்லை என்ற தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியமை முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்படவிருந்த பேரழிவிலிருந்து இறை அருளால் காப்பாற்றப்பட்டோம். இதனை எந்த ஒரு முஸ்லிமும் அத்தனை சீக்கிரம் மறந்துவிட முடியாது. இந்த விடயமானது ரவூப் ஹக்கீமின் சாணக்கியத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
கொரோனாவில் மரணித்தவர்களை உலகமே நல்லடக்கம் செய்தபோது சர்வதேச பரிந்துரைகளைக்கூட கண்டுகொள்ளாமல் எரித்து முஸ்லிம் சமூகத்தின் மதநம்பிக்கை மீது மண் அள்ளிப்போட்டபோது பாராளுமன்றமத்திலும், பாராளுமன்றத்திற்கு வெளியேயும் ஆக்க பூர்வமான
முன்னெடுப்புக்களை தொடர்ந்தும் மேற்கொண்டது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயற்பாடுகளே. குறிப்பாக அலி ஸாஹிர் மௌலானாவின் வெள்ளைத் துணி போராட்டம் தேசியத்திலும், சர்வதேசத்திலும் பலத்த எதிரொலியை ஏற்படுத்தியது. பெரும்பான்மை சமூகத்தைக்கூட இந்த செயற்பாடு ஆகர்சித்தது எனலாம். இவ்வாறு முஸ்லிம்கள் பாதிக்கப்படுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அச்சமூகத்தின் நேரடி பிரதிநிதிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் களத்தில் நின்று செயற்பட்டு வருகிறது.
மிகவும் கடுமையான காலகட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 33ஆவது பேராளர் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாடு கட்சியில் ஏற்கெனவே உள்ள பிழைகள் சரிசெய்யப்பட்டு போராளிகளின் எதிபார்ப்புகளையும், பெருந்தலைவர் அஷ்ரபின் கனவுகளையும் நிறைவேற்றுகின்ற அளவில் நடைபெறுமா என்ற பொதுவான கேள்வி நடுநிலையாக சிந்திக்கின்ற அரசியல் விமர்சகர்களுக்கு இருக்கிறது. எது எப்படியோ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தூண்களான அதன் போராளின் விடயத்தில் அசமந்த போக்குடன் இந்தக்கட்சி இருக்கக்கூடாது என்பதே பொதுப்படையான கருத்தாகும்