கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் சிகிச்சை பெற்று வந்த 129 பேர் நலமுடன் வீடு திரும்பினர். மேலும் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் 32 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. கள்ளக்குறிச்சியில் கடந்த 18ம்தேதி விஷ சாராயம் அருந்தி பாதிக்கப்பட்ட 229 பேர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் முண்டியம்பாக்கம், புதுச்சேரி ஜிப்மர், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மற்றும் கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் சிகிச்சை பலனின்றி நேற்று வரை 64 பேர் உயிரிழந்தனர்.
மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 129 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இது தவிர கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 13 பேர், சேலம் அரசு மருத்துவமனையில் 9 பேர், புதுச்சேரி ஜிப்மரில் 8 பேர், விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் 2 பேர் என மொத்தம் 32 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கண்ணன் (67), இளையராஜா (40), நாராயணன் (‘60), பாவாடை (53) ஆகிய 4 பேரும் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டனர்