உலகத்தில் மிக மோசமான யுத்தமொன்றுக்கே நாம் முகம்கொடுக்க நேரிட்டதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
“யுத்தம் என்பது கிரிக்கட் போட்டியை போன்றதல்ல. உயிரிழப்புக்கள் ஏற்படும். சொத்துக்கள் இழக்கப்படும்.” எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினால் எழுதப்பட்ட நூல் வெளியீட்டு விழா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (28) கொழும்பு நெலும் பொக்குன கலையரங்கில் நடைபெற்றது.
இதன்போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
யுத்தம் ஆரம்பித்த காலத்திலும் அதற்கு பிற்பட்ட காலத்திலும் அரசாங்கத்திலிருந்த நான் யுத்தத்தில் பங்கெடுத்திருந்த பெரும்பாலான அதிகாரிகளை அறிவேன்.
அப்போது பல்வேறு சிறந்த அதிகாரிகள் உருவானதோடு அவர்களின் வரிசையில் சரத் பொன்சேகாவுக்கு சிறந்த இடம் காணப்பட்டது.
குறிப்பாக யாழ்ப்பாணத்தில் ஜயசிக்குரு போராட்டம் தோல்வியை தழுவியதால் இராணுவம் கைப்பற்றிய பலவற்றை இழக்க நேரிட்டது.
அந்த நேரத்தில் நான் பிரதமராக பதவி வகித்ததோடு, யாழ்ப்பாணத்தை யாரிடம் கையளிப்பது என்ற கேள்வி காணப்பட்டது.
அப்போது பலர் இறந்து போயிருந்ததோடு, காயங்களுக்கும் உள்ளாகியிருந்ததால் படையினர் எண்ணிக்கை குறைந்திருந்தது. யாழ்ப்பாணத்துக்கான படைப்பிரிவொன்று அவசியமென சிலர் கூறினர்.
அப்போது நான் சரத் பொன்சேகாவிடம் யாழ்ப்பாணத்தை ஒப்படைப்போம் என இராணுவ தளபதியிடம் கூறினேன்.
அதன்படியே செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. அவர் வீழ்ந்த இடத்தில் எழுந்து யுத்த வெற்றியை நோக்கி நகர்ந்தார்.
அதற்காக கஷ்டமான தீர்மானங்களை எடுக்க வேண்டியிருந்தது. யுத்தம் என்பது கிரிக்கட் போட்டியை போன்றதல்ல.
உயிரிழப்புக்கள் ஏற்படும். சொத்துக்கள் இழக்கப்படும். அதற்கு மத்தியிலும் யுத்தத்தை வழிநடத்திச் செல்லும் வல்லமை அவரிடம் இருந்தது.
உலகத்தில் மிக் மோசமான யுத்தமொன்றுக்கே நாம் முகம்கொடுத்தோம். மற்றைய நாடுகளில் இன்றும் அவ்வாறான யுத்தங்கள் காணப்படுகின்றன.
ஆப்கானிஸ்தான் யுத்தம் இலங்கைக்கு முன்னதாக ஆரம்பமானது. அந்த வகையில் சரத் பொன்சேகா தனது பொறுப்பை சரிவர செய்திருக்கிறார்.
அதேபோல் சிவில் வாழ்க்கையிலும் அவர் பல சவால்களை எதிர்கொண்டிருக்கிறார்.
அதன்போது அவர் தனிமைப்பட்ட வேளைகளிலும், சிறையிடப்பட்ட வேளையிலும் வலுவான மனிதராக உருவாகினார்.
அதனால் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோடு கலந்துரையாடி சரத் பொன்சேகாவிற்கு பீல்ட் மார்ஷல் அந்தஸ்த்து வழங்கப்பட்டது.
அதற்கு தகுதியானவர் என்ற வகையில் அவரும் ஏற்றுக்கொண்டார். அரசாங்கம் என்ற வகையில் சரத் பொன்சேகாவின் தெரிவை கொண்டு நாம் பயனடைந்தோம்.
அவர் போராட்ட குணம் கொண்டவர். யுத்த களத்திலும் அரசியல் களத்திலும் போராட்டத்தை கைவிடவில்லை. அவரால் நாட்டுக்கு இனியும் சேவையாற்ற முடியும்.
தற்போது நாட்டுக்குள் யுத்தம் முடிந்துவிட்டது சமாதானத்துக்கான பணிகளை செய்வோம் என்று சரத் பொன்சேகா யாழ்ப்பாணத்தில் வைத்து ஒரு முறை கூறினார்.
அதற்கு தேவையாக நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்த பணிகளை நிறைவு செய்ய எதிர்பார்க்கிறேன். நாம் அனைவரும் ஒன்றுபட்டு நாட்டை முன்னேற்றிச் செல்வோம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
எமது இராணுவம் அனுபவங்கள் நிறைந்து. நாட்டைக் கட்டியெழுப்பி சமாதானத்தை ஏற்படுத்த இவர்களால் முடியும்.” என்றும் தெரிவித்தார்