'இதோ ஒரு நற்செய்தி' என்ற தலைப்பின் கீழ் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று புதன்கிழமை நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தியிருந்தார்.
இந்த உரையில் சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக கடன் வழங்குநர்களுடன் ஏற்படுத்திக்கொண்ட உடன்பாடுகள் குறித்து ஜனாதிபதி விளக்கமளித்ததுடன், 2043ஆம் ஆண்டுவரை கடன் செலுத்தல்களை மறுசீரமைப்பதற்கான அனுமதிகள் கிடைக்கப்பெறும் என கூறினார்.
அதேபோன்று இந்த செயல் திட்டத்தை முன்னோக்கி கொண்டுசெல்ல அனைவரும் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
ஜனாதிபதியின் உரை தொடர்பில் பல கருத்தகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
”நாடு மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமாயின் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் கவிழ்க்கப்பட வேண்டும்,“ என மக்கள் போராட்ட இயக்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அந்த அமைப்பின் பிரதிநிதி வசந்த முதலிகே கருத்து வெளியிடுகையில்,
”ரணில் விக்ரமசிங்கவை வீட்டுக்கு அனுப்பவே மக்கள் போராட்ட அமைப்பை உருவாக்கியுள்ளோம்.
இந்த நாடு சுபிட்சமாக வேண்டுமெனில் ரணில் தலைமையிலான அரசாங்கத்தை விரட்டியடிக்க வேண்டும்.
இன்று நாட்டில் 26 வீதமான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்படுகின்றனர். மேலும் 30 வீதமானவர்கள் கடுமையான ஏழ்மையில் உள்ளனர். 36 வீதம் பேர் வேலையில்லாமல் உள்ளனர். வளங்கள் விற்கப்பட்டு நாடு அழிக்கப்படுகிறது.
ரணில் கடன் வாங்கியே கோப்பையை வென்றுள்ளார். எனவே மக்கள் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்?. ரணில் விரட்டியடிக்கப்படுவதே மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருக்க முடியும்,” எனவும் அவர் கூறியுள்ளார்.