எம்.ஐ.அப்துல் நஸார்
காஸாவில் எட்டு மாத கால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்கா முன்வைத்த யுத்த நிறுத்தத் திட்டத்தினை திங்களன்று ஐ.நா. பாதுகாப்பு சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இத் தீர்மானத்திற்கு பாதுகாப்பு சபையின் 15 அங்கத்துவ நாடுகளுள் 14 நாடுகள் ஆதரவாக வாக்களித்த நிலையில் றஷ்யா மாத்திரம் வாக்களிப்பில் பங்குபற்றவில்லை.
காஸா யுத்தம் தொடர்பான வரைவு தீர்மானத்தின் மீது சபை வாக்கெடுப்பு நடத்துவது இது 11 ஆவது முறையாகும். இவற்றுள் மூன்று தீர்மானங்கள் மாத்திரமே நிறைவேற்றப்பட்டுள்ளன.
தீர்மானம் 2735, மே மாதம் 31 ஆந் திகதியன்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனால் அறிவிக்கப்பட்ட மூன்று கட்ட யுத்த நிறுத்த முன்மொழிவாகும், இதை இஸ்ரேலிய அதிகாரிகள் ஏற்றுக்கொண்டதாக வொஷிங்டன் கூறியதுடன், ஹமாஸையும் அதனை ஏற்குமாறு கோரப்பட்டுள்ளது. ‘தாமதமின்றின்றியும் எவ்வித நிபந்தனையின்றியும் அதன் விதிமுறைகளை முழுமையாக செயல்படுத்த’ இரு தரப்பையும் அது வலியுறுத்துகிறது.
‘தற்போது முன்வைக்கப்பட்டுள்ள யுத்த நிறுத்த உடன்பாட்டினை ஏற்குமாறு ஹமாஸுக்கு ஒரு தெளிவான செய்தியை சபை அனுப்பியுள்ளது. அப்படிச் செய்தால் யுத்தம் இன்றைய தினமே நின்றுவிடும்’ என தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர், ஐ.நா.வுக்கான அமெரிக்காவின் பெண் தூதர் லிண்டா தோமஸ் கிரீன்பீல்ட் தெரிவித்தார்.
‘உயிர்களைக் காப்பாற்றவும், காஸா மக்களை மீள்நிலைப்படுத்தவும் குணப்படுத்தவும் இது உதவும், இஸ்ரேலிய பணயக்கைதிகளை அவர்களது குடும்பங்களுடன் மீண்டும் இணைக்கும் இந்த உடன்பாட்டில் சர்வதேச சமூகம் ஒன்றுபட்டிருப்பதை ஹமாஸ் இப்போது பார்க்க முடியும்’ எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த உடன்பாடு ‘மிகவும் பாதுகாப்பான இஸ்ரேலின் இருப்புக்கு வழிவகுப்பதோடு, லெபனானுடனான இஸ்ரேலின் வடக்கு எல்லையில் அமைதி ஏற்படவும் முன்னேற்றம் ஏற்படவும் வாய்ப்பை ஏற்படுத்தும்’ எனவும் தோமஸ் கிரீன்பீல்ட் தெரிவித்தார்.
‘ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் அச்சுறுத்தல் காரணமாக வடக்கு இஸ்ரேலில் உள்ள மக்கள் தமது வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்துள்ள நிலைமையினை நாம் மறக்க முடியாது. ஈரானின் ஆதரவுடனான பயங்கரவாத குழுக்களின் இந்த தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும்’ எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.
ஹமாஸினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த யுத்தத்தில் பலஸ்தீன மக்கள் நரக வேதனையினை அனுபவித்திருக்கிறார்கள் எனத் தெரிவித்த அவர் அந்த மக்கள் மீள இயல்புநிலைக்குத் திரும்புவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதனை ஹமாஸ் அந்த மக்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இத் தீர்மானத்தில் குறித்துக் காட்டப்பட்டுள்ள திட்டத்தின் ஒரு கட்டத்தில், ‘உடனடியானதும், முழுமையானதுமான யுத்த நிறுத்தத்தைச் செய்தல், இதன்போது பெண்கள், முதியவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் உட்பட பணயக்கைதிகளை விடுவித்தல், கொல்லப்பட்ட சில பணயக்கைதிகளின் உடல்களை ஒப்படைத்தல், பலஸ்தீன கைதிகளின் விடுவிப்பு என்பன இடம்பெறும்.
இது தவிர ‘காஸாவில் உள்ள மக்கள் வாழும் பகுதிகளிலிருந்து இஸ்ரேல் தனது படைகளை விலக்கிக் கொள்ள வேண்டும், பலஸ்தீனப் பொதுமக்கள் தமது வீடுகள் மற்றும் வடக்குப் பகுதிகள் உட்பட காஸாவின் அனைத்துப் பகுதிகளிலும் சுற்றுப்புறங்களுக்கும் மீளத் திரும்ப வேண்டும், அத்துடன் மனிதாபிமான உதவிகளை பாதுகாப்பாகவும் தொடராகவும் விநியோகிக்கவும்’ நடவடிக்கை எடுக்க கோரப்பட்டுள்ளது. சர்வதேச சமூகத்தால் வழங்கப்படும் வீடுகள் உட்பட, காஸா பகுதி முழுவதும் தேவைப்படும் அனைத்து வசதிகளும் பலஸ்தீன மக்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும்.
இரண்டாம் கட்டத்தில் ‘யுத்தம் நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவரப்படல், காஸாவில் இருக்கும் ஏனைய அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிப்பதற்கு பகரமாக, காஸாவிலிருந்து இஸ்ரேலியப் படைகளை முழுமையாக திரும்பப் பெறுதல்’ ஆகியவை அடங்கும்.
மூன்றாம் கட்டத்தில் ‘காஸாவிற்கான பாரிய நீண்ட கால புனரமைப்புத் திட்டம் மற்றும் காஸாவில் மேலும் உயிரிழந்த பணயக்கைதிகளின் உடல்கள் இருப்பின் அவற்றை குடும்பங்களிடம் ஒப்படைத்தல்’ ஆகியன அடங்கும்.
முதல் கட்டத்தின் போது இரு தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் ஆறு வாரங்களுக்கு மேல் இடம்பெற வேண்டும் எனவும், பேச்சுவார்த்தைகள் தொடரும் வரை போர் நிறுத்தம் தொடர வேண்டும் என இத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, அமெரிக்கா, எகிப்து மற்றும் கட்டார் ஆகிய நாடுகள் பேச்சுவார்த்தைகளை உறுதி செய்ய தயாராக இருப்பதையும் அனைத்து உடன்பாடுகளும் எட்டப்பட்டு, இரண்டாம் கட்டம் தொடங்கும் வரை தொடர்வதற்கான இணக்கத்தையும் வரவேற்றுள்ளது.
காஸாவின் நிலப்பரப்பைக் குறைக்கும் நடவடிக்கைகள் உட்பட, காஸா பகுதியில் எந்தவொரு மக்கள்தொகை மாற்றம் அல்லது பிராந்திய மாற்றத்தை ஏற்படுத்துவதை இத் தீர்மானம் நிராகரிப்பதோடு இரு நாடுகள் என்ற தீர்வுக்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது, மேலும் காஸா பள்ளத்தாக்குப் பகுதியினை பலஸ்தீன அதிகாரசபையின் கீழுள்ள மேற்கு கரையுடன் ஒன்றிணைப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது.
‘நாங்கள் பல மாதங்களாக இதனைத்தான் கூறி வருகின்றோம், காஸாவில் நிலவும் துயரம் முடிவுக்கு வர வேண்டும்’ என வாக்கெடுப்பின் பின்னர் சபை உறுப்பினர்கள் மத்தியில உரையாற்றிய ஐ.நா.வுக்கான ஸ்லோவேனியாவின் பெண் பிரதி நிரந்தரப் பிரதிநிதி, ஒண்டினா ப்ளோகர் ட்ரோபிக் தெரிவித்தார்.
‘பணயக்கைதிகளை உடனடியாக விடுவிக்குமாறு நாங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். எவ்வாறாயினும், கடந்த சனிக்கிழமையன்று அகதிகள் முகாமில் இடம்பெற்றதைப் போன்று, பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு நூற்றுக்கணக்கான பொதுமக்களைக் கொன்று காயப்படுத்துவது. மீள இயல்புநிலையை ஏற்படுத்தாது, பணயக்கைதிகள் மீட்பு நடவடிக்கைகளின்போது சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் மனித உரிமைகள் சட்டத்தின் கோட்பாடுகள் பின்பற்றப்பட வேண்டும்’ எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
போரின் போது இடம்பெற்ற பல அட்டூழியங்களையும் பயங்கரங்களையும் பட்டியலிட்ட ட்ரோபிக் ‘பெண்கள், குழந்தைகள், ஊனமுற்றோர் மற்றும் முதியவர்கள் உட்பட பொதுமக்களுக்கு உதவி மறுக்கப்பட்டமை, மனிதாபிமான மற்றும் ஐநா பணியாளர்கள் கொல்லப்பட்டமை, ஐநா வளாகம் குறிவைக்கப்பட்டமை, வைத்தியசாலைகள் முற்றுகையிடப்பட்டமை, மயக்க மருந்து வழங்கப்படாமல் குழந்தைகளின் மூட்டுகள்; அகற்றப்பட்டமை, உரிய உதவியின்றி நிகழும் பிரசவங்கள், பாரிய மனிதப் புதைகுழிகள், காஸா மற்றும் இஸ்ரேலில் உள்ள பொதுமக்கள் பகுதிகள் குறிவைக்கப்பட்டு, தாக்கப்பட்டு அழிக்கப்பட்டமை – இவ்வாறான சம்பவங்கள் எதுவும் மீண்டும் நடைபெறக்கூடாது’ எனத் தெரிவித்தார்.
‘இந்தப் போரின் போது பிறந்த குழந்தைகளுள் பலர் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்துள்ளனர் என்பது இந்தச் சபை தடுத்திருக்க வேண்டிய ஒன்றாகும், இந்த காரணத்திற்காகவே நாம் மீண்டும் ஒருமுறை உடனடி யுத்த நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கிறோம். இது ஒரு விரிவான தீர்வை அடைவதற்கான முதல் படியாகும்’ எனவும் அவர் தெரிவித்தார்