அளுத்கம வர்த்தக நகரை மையப்படுத்தி அளுத்கம, பேருவளை உள்ளிட்ட பொலிஸ் பிரிவுகளில் பதிவான இனவாத வன்முறை சம்பவங்கள் நடந்து 10 வருடங்கள் பூர்த்தியாகின்றன. ஆனால், அந்த இனவாத வன்முறையின் வடுக்கள் அப்படியே தான் இருக்கின்றது.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் திகதி அதிகாரிகொட, வெலிபிட்டிய, சீனன் வத்த, துந்துவ, பேருவளை, வெலிப்பன்னை உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லிம்களை இலக்கு வைத்து வன்முறைகள் பதிவாகின. இந்த இனவாத வன்முறைகளில் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். துப்பாக்கிச் சூடு மற்றும் ஏனைய நடவடிக்கைகளால் 80 பேர் படுகாயமடைந்துள்ளனர். 48 வீடுகள் முற்றாக தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. 17 பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டன. முஸ்லிம்களுக்கு சொந்தமான 17 வர்த்தக நிலையங்கள் முற்றாகவும், 62 வர்த்தக நிலையங்கள் பகுதியளவிலும் அழிக்கப்பட்டன. 2248 முஸ்லிம்கள் உள்ளூரில் இடம்பெயர்ந்தனர். இந்த தரவுகள் உயர் நீதிமன்றின் வழக்காவணத்தில் உள்ள உத்தியோகபூர்வ தரவுகளாகும்.
இந்த இனவாத வன்முறைகளுக்கு உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படாததால் பின்னர் கிங்தோட்டை, திகன என முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை கலாசாரம் தொடர்ந்தது.
அளுத்கம வன்முறைகளுக்கு முன்னர் அங்கு நடந்த கூட்டம் ஒன்றில் பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சுமார் ஒரு மணி நேரமும் 15 நிமிடங்களும் ஆற்றிய உரை இந்த வன்முறைகளுக்கு முக்கிய தூண்டுதலாக இருந்தது. எனினும் அது தொடர்பில் இதுவரை ஞனசார தேரருக்கு எதிராக எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாமை இனவாதிகளுக்கு தைரியத்தை அளிப்பதாகவே நோக்க வேண்டியுள்ளது.
இக்கூட்டம் தொடர்பில் முன் கூட்டியே அரசாங்கத்துக்கு தகவல் கிடைத்திருந்தும் அக்கூட்டத்தை நடாத்த அனுமதியளித்து, பொலிஸ் கட்டளைச் சட்டத்தை சரிவர அமுல் செய்ய பொலிஸார் தவறியுள்ளதாகவும் பொலிஸாரும் அரசாங்கமும் தமது பொறுப்புக்களை சரிவர அமுல் செய்ய தவறியதாகவும் அதன் விளைவே அளுத்கம மற்றும் அதனை அண்மித்த முஸ்லிம் கிராமங்கள் மீதான அத்துமீறிய தாக்குதல் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி ஜெப்ரி அழகரட்ணம், சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் ஆகியோர் உயர் நீதிமன்றில் அண்மையில் வாதிட்டிருந்தமையும் இங்கு நினைவு கூரத்தக்கது.
இந்த கலவரம் ஒரு போக்குவரத்து சம்பவத்திலிருந்து ஆரம்பித்தது. இரு முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு இடையே வழமையாக பாதையில் நடக்கும் ஒரு வார்த்தை பிரயோக சம்பவம், திரிபுபடுத்தப்பட்டு கலவரத்துக்கான அஸ்திவாரம் இடப்பட்டது. திகனையிலும் இதுதான் நடந்தது. போக்குவரத்து சம்பவத்தை மையப்படுத்தி நடந்ததாக கூறப்பட்ட தேரர் மீதான தாக்குதல் தொடர்பில் அளுத்கம பொலிஸார் 3 பேருக்கு எதிராக களுத்துறை நீதிமன்றில் வழக்குத் தொடுத்தனர். அதில் அம்மூவரும் நிரபராதிகள் என கூறி, அப்படி ஒரு தாக்குதல் நடந்தமைக்கான சான்றுகள் இல்லை எனக் கூறி விடுவிக்கப்பட்டுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவங்கள் குறித்து விசாரித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு, அளுத்கம, பேருவளை மற்றும் திகன உள்ளிட்ட முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த வன்முறைகள் தொடர்பில் விடயங்கள் தொடர்பிலும் ஆராய்ந்துள்ளது. அதில் ஞானசார தேரருக்கு எதிராக சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் குறித்தான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் ( ஐ.சி.சி.பி.ஆர்)கீழ் நடவடிக்கை எடுக்க சட்ட மா அதிபருக்கு பரிந்துரையும் செய்துள்ளது. எனினும் இதுவரை அந்த பரிந்துரை அமுல் செய்யப்படவில்லை.
இந்த இனவாத வன்முறைகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஐந்து அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உயர் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு வருகின்றது. வன்முறைகளை கட்டுப்படுத்த பொலிஸார் தவறியதன் ஊடாக தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும், வன்முறைகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககவும் அம்மனுவில் கோரப்பட்டுள்ளது. அத்துடன் விஷேடமாக, இவ்வாறான வன்முறைகள் ஏற்படுவதை தடுக்க பொறிமுறை ஒன்றினை உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பு ஊடாக வழங்கி அதனை அமுல் செய்ய சட்டத்தை அமுல் செய்பவர்களுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
இந்த பொறிமுறையே தற்போதைக்கு மிக அவசிய மாகிறது. அவ்வாறான தடுப்பு பொறிமுறையொன்றே எதிர்காலத்தில் இனவாதிகளை கட்டுப்படுத்தவும், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் உதவும்.