தேசிய மட்ட அபிவிருத்தித் திட்டங்களின் பயனை கிராமப்புற மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கும் வகையில் வீதி கட்டமைப்பை மேம்படுத்தி நாடு முழுவதும் 250 புதிய பாலங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
2014-2024 காலப்பகுதியில் நெதர்லாந்து ஜென்சன் பிரிஜிங் நிறுவனத்தினால் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் 750 கிராமிய பாலங்களை வெற்றிகரமாக நிர்மாணித்து நிறைவு செய்ததை முன்னிட்டு நேற்று முற்பகல் கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் ஜென்சன் பிரிஜிங் நிறுவனத்தால் நிர்மாணிக்கப்பட்ட 750 பாலங்களின் பணிகள் நிறைவடைந்ததை இன்று நாங்கள் ஒன்றிணைந்து கொண்டாடுகிறோம். இது அந்த நிறுவனம் வெற்றிகரமாக நிறைவேற்றிய மாபெரும் பணி என்பதைக் கூற வேண்டும். இந்த கிராமப்புறப் பாலங்கள் நிர்மாணிக்கப்பட்ட பிரதேசங்கள் பற்றி எனக்குத் தெரியும். அவை மிகவும் பின்தங்கிய பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பாலங்களால் இணைக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.
மேலும், இந்த விரிவான வீதிக் கட்டமைப்பு, முக்கிய அதிவேகப்பதைகளுக்கு பொருட்களை கொண்டு செல்வதற்கும், கொழும்பு அல்லது பிற முக்கிய நகரங்களுக்கு பொருள்களை அனுப்புவதற்கும் உதவுகிறது. எனவே, இத்திட்டம் மிகவும் முக்கியமான திட்டம் என்பதை குறிப்பிட வேண்டும். மேலும் இதுபோன்ற 250 பாலங்களை அமைக்க எதிர்பார்த்துள்ளோம் என்றார்.