சீரற்ற காலநிலை காரணமாக நாடு முழுவதும் 35,000க்கும் அதிகமான வீடுகளில் மின்தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொஸ்கம, சீதாவக்க மற்றும் மூன்று பிரதேசங்களில் பாதுகாப்பற்ற சூழ்நிலை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை இன்று (3) பிற்பகல் தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை அதிகாலை 2 மணி தொடக்கம் இன்று (3) அதிகாலை வரை 35,000 இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மின்சாரம் விநியோகம் சீரமைப்பு
மாத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸ, தெனியா உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், பராமரிப்புப்பணிகள் இடம்பெற்றுள்ளதாகவும் அந்த சபை தெரிவித்துள்ளது.
குறித்த பகுதிகளில் பராமரிப்புப்பணிகள் முடிந்து மின் விநியோகம் சீரமைக்கப்படும் என்றும், சில இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பராமரிப்புப் பணிகளுக்கு செல்ல முடியாத நிலை இருப்பதாகவும் அந்த சபை குறிப்பிட்டுள்ளது.
மரம் முறிவுகள் போன்ற அனர்த்தங்களினால் மின்சார சபைக்கு சொந்தமான சொத்துக்கள் சேதமடைந்துள்ள போதிலும் அவற்றின் பெறுமதி இதுவரையில் மதிப்பிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.