கனேடிய மாகாணமொன்றில், புலம்பெயர்தல் கொள்கைகளில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், உண்ணாவிரதம் இருந்து வந்த மாணவர்கள், உண்ணாவிரதத்தை இடைநிறுத்த முடிவு செய்துள்ளார்கள்.
கனடாவின் Prince Edward Island மாகாணத்தில் புலம்பெயர் கொள்கைகளில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களால் தங்கள் எதிர்காலமே கேள்விக்குறியானதால், அந்த கொள்கை மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்திய மாணவர்கள் பலர் இம்மாதம், அதாவது, மே மாதம் 24ஆம் திகதி முதல் உண்ணாவிரதம் இருந்துவந்தார்கள்.
இரண்டு வாரங்களாக அவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் நிலையில், மாகாண புலம்பெயர்தல் அலுவலக இயக்குநரான Jeff Young மாணவர்களை சந்தித்துள்ளார்.
Jeff Youngஇன் சந்திப்பைத் தொடர்ந்து, மாணவர்கள் உண்ணாவிரதம் இருப்பதை இடைநிறுத்த முடிவு செய்துள்ளார்கள்.
அரசு, மாணவர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்யும் நேரத்தில், உண்ணாவிரதத்தை நிறுத்துமாறு Jeff Young மாணவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளதாக, மாணவர்களில் ஒருவரான ரூபிந்தர் பல் சிங் தெரிவித்துள்ளார்.
அவர் கேட்டுக்கொண்டபடி, உண்ணாவிரதத்தை இடைநிறுத்த தாங்கள் முடிவுசெய்துள்ளதாகவும், நல்ல பதில் வரும் என தாங்கள் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உண்ணாவிரதம் இருந்த சில மாணவர்கள், திரவ உணவுகளை எடுத்துக்கொள்வதையும் கடந்த செவ்வாயன்று நிறுத்தவே, சிலரது நிலைமை மோசமானது. மாணவர்கள் சிலர் மயங்கிவிழத் தொடங்க, அவர்களை அதிகாரிகள் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.