தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் தற்கொலை குண்டுதாரிகள் உருவாவதற்கு பிரதான இரண்டு காரணங்கள் உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
வவுனியாவிலுள்ள இரட்டைபெரியகுளம் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற, தேசிய மக்கள் சக்தியின் மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போத அவர் மேலும் தெரிவிக்கையில், ஆட்சியாளர்கள் மக்கள் மத்தியில் பாரிய இனவாதத்தை தூண்டி, மாபெரும் யுத்தத்தை உருவாக்கினார்கள். அது தானாக உருவான யுத்தம் அல்ல. வடக்கு - தெற்கிலுள்ள அரசியல்வாதிகள், அவர்களின் பதவிக்காக அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட யுக்தியினால் உருவான யுத்தம்.
பிரதான இரண்டு காரணங்கள்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் தற்கொலை குண்டுதாரிகள் உருவாவதற்கு பிரதான இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவது, 1981இல் அபிவிருத்தி சபை தேர்தல். ரணில் விக்ரமசிங்கவின் குழுவினர் யாழ்ப்பாணத்துக்கு சென்று யாழ். நூலகத்தை எரித்தார்கள். தேர்தலுக்காக, வாக்குகளை பெறுவதற்காக நூலகத்தை எரித்த சம்பவத்தை நீங்கள் எங்காவது கேள்விப்பட்டதுண்டா?
வடக்கில் உள்ள தமிழ் மக்கள் வாசிப்பு பழக்கத்துடன் மிகவும் நெருக்கமானவர்கள். அம்மக்கள் யாழ். நூலகத்துக்குச் செல்கையில், தெய்வ ஸ்தலங்களுக்கு செல்வதைப்போன்று தமது காலணிகளை வெளியில் விட்டுவிட்டுச் செல்வதை நான் கண்டுள்ளேன். வடக்கு மக்களுக்கும் யாழ். நூலகத்துக்கும் இடையில் அவ்வாறானதொரு ஒற்றுமையிருந்து. ஆனால், ரணில் விக்ரமசிங்கவின் குழுவினர், 1981இல் தேர்தலில் வெற்றிக்காண அந்த நூலகத்தை தீக்கிரையாக்கினார்கள்.
தெற்கிலுள்ள அரசாங்கம் தமது நூலகத்தை தீயிட்டு எரிப்பதனை நினைத்து அம் மக்கள் வேதனைப்பட்டார்கள். இதனை தொடர்ந்து 1983ஆம் ஆண்டு முக்கியமான சம்பவமொன்று நிகழ்ந்தது. மக்கள் விடுதலை முன்னணியுடன், மக்கள் ஒன்றிணைந்து செயற்படுவதைக்கண்டு ஜே.ஆர்.ஜெயவர்தன பயந்து, எமது கட்சியின் பயணத்தை ஒழிக்க முடிவு செய்தார். மக்கள் விடுதலை முன்னணியின் வளர்ச்சி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் அரசியலுக்கு தடையாக இருந்தது.
அதனால், அவர் எம் கட்சியை தடைசெய்ய முயற்சித்தார். இதனால், ஜே.ஆர்.ஜெயவர்தனவும், ரணில் விக்ரமசிங்கவும் இணைந்து 1ஆம், 2ஆம் குறுக்குத் தெருவுக்கு தீவைத்தார்கள். ஒரு கறுப்பு ஜுலையை உருவாக்கினார்கள். அநுராதபுரம் சிற்றம்பலம் மண்பத்தையிட்டு கொழுத்தினார்கள். முழு நாடும் தீப்பற்றி எரிந்தது. இதனை ஜேஆர் ஜெயவர்தனவின் ரௌடிகளே செய்தார்கள்.
ஆனால், 83இன் கலவரத்திற்கு மக்கள் விடுதலை முன்னணியினரே காரணம் என எம் கட்சியை தடை செய்தார்கள். இதனால், தெற்கில் தமிழ் மக்களின் சொத்துக்கள் அழிக்கப்படுவதையும், உயிர் காவுக்கொல்லப்படுவதையும், தெற்கிலிருந்து தமிழ் மக்கள் விரட்டியடிக்கப்படுவதையும் நினைத்து, பிரபாகரனுக்கு வடக்கில் புதிய அரசாங்கமொன்று உருவாக்க வேண்டிய தேவையேற்பட்டது.
ஆயுதமேந்திய மாபெரும் இயக்கம் உருவாக்கம்
ஆகவே, தெற்கில் தமது மக்கள் அழிக்கப்படுவதையும், வடக்கில் நூலகத்தை எரித்தமையும் கூறி வடக்கு இளைஞர்களை யுத்தத்துக்காக அழைத்தார். ஆயுதமேந்திய மாபெரும் இயக்கத்தை பிரபாகரன் உருவாக்கினார். இதில் சாதாரண தாய் தந்தைகளின் பிள்ளைகளின் உயிர்களே பறிபோயின. இந்த நாட்டிலுள்ள சிங்கள கிராமங்கள் அச்சத்துடன் காணப்பட்டன.
அவர்களின் பிள்ளைகள் இராணுவத்தில் இணைந்தனர். மேலும், வுவனியாவை சற்று தள்ளி வாழும் தமிழ் மக்களும் பயத்துடனே வாழ்ந்தார்கள். அவர்களின் பிள்ளைகளும் விடுதலைப் புலிகளுடன் இணைந்தார்கள். மேலுள்ள ஆட்சியாளர்கள் யுத்தம் செய்தார்கள். எமது கிராமங்கள் பாதுகாப்பற்று காணப்பட்டது. மேல் உள்ள ஆட்சியாளர்கள் யுத்தத்தை உருவாக்கினார்கள்.
எமது பிள்ளைகள் யுத்தத்துக்கு சென்றார்கள். ஆகவே, எமது நாடு முன்னேற வேண்டுமாயின் பிரதான சில காரணங்கள் இருக்கின்றன. அதாவது, தற்போது நமக்கு சண்டையற்ற ஒரு நாடு தேவை. பிரிவினைவாதயில்லாத, மீண்டும் யுத்தம் ஏற்படாத நாடே தேவை. சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுயுடன் வாழக்கூடிய ஒரு நாட்டை நாம் உருவாக்க வேண்டும். எமது பரம்பரை யுத்தம் செய்துக் கொண்ட பரம்பரை. ஆனால் எமது பிள்ளைகளுக்கு யுத்தம் செய்துக்கொள்ள இடமளிக்கக்கூடாது என குறிப்பிட்டுள்ளார்.