கனடாவில், மூன்று மாதக் குழந்தை உட்பட இந்தியக் குடும்பம் ஒன்று விபத்தில் பலியான வழக்கில் தொடர்புடைய நபர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவில், கடந்த மாதம், அதாவது, ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி, மதுபானக்கடை ஒன்றில் திருடியதாக சந்தேகத்தின்பேரில் நபர் ஒருவரை பொலிசார் துரத்த, அவர் வேன் ஒன்றில் தப்பியோட, அவரது வேன் மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில், காரில் பயணித்த, இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள சென்னையைச் சேர்ந்த மணிவண்ணன் ஸ்ரீனிவாசபிள்ளை (60), அவரது மனைவியான மஹாலக்ஷ்மி அனந்தகிருஷ்ணன் (55)மற்றும் தம்பதியரின் பேரப்பிள்ளையான மூன்று மாதக் குழந்தையும் பலியானார்கள்.
தம்பதியர், தங்கள் மகன் கோகுல்நாத் (33), மருமகள் அஷ்விதா ஜவஹர் (27) மற்றும் பேரனான மூன்று மாதக் குழந்தை ஆதித்யா விவான் ஆகியோரைப் பார்ப்பதற்காக கனடா சென்ற நிலையில், குழந்தையும், அவனுடைய தாத்தா பாட்டியும் பலியானார்கள்.
விபத்தை ஏற்படுத்திய ட்ரக்கை ஓட்டி வந்த ககன்தீப் சிங் (21) என்பவரும் அந்த விபத்தில் பலியான நிலையில், அவருடன் பயணித்த மற்றொரு நபரான மன்பிரீத் கில் (38) என்பவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், விபத்து மற்றும் அதைத் தொடர்ந்து நிகழ்ந்த விரும்பத்தகாத சம்பவங்களில் மன்பிரீத்துக்கும் தொடர்பு இருப்பதாக அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை மன்பிரீத் நீதிபதி முன் காணொளி வாயிலாக ஆஜர் செய்யப்பட்டிருக்கவேண்டும். ஆனால், அவர் ஆஜராகவில்லை. ஆகவே, அவர் எங்கே என்னும் கேள்வி எழுந்துள்ளது. அவர் காயங்கள் காரணமாக இன்னமும் மருத்துவமனையிலேயே இருப்பதாகவும், அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட மேலும் கால அவகாசம் தேவை என்றும் கூறப்படுகிறது.