மத்திய மாகாணத்தில் கால்நடைகளுக்கு பரவும் நோயினால் 135 மாடுகள் உயிரிழந்துள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நோயைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர, கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்க்கு ஆலோசனை வழங்கியுள்ளார் .
நுவரெலியாவில் பதிவாகியுள்ளஇந்த அம்மை நோயைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான தடுப்பூசிகளை வழங்குவதற்கு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் மற்றும் தனியார் துறை இணைந்து கூட்டு பணியை நடைமுறைப்படுத்தியுள்ளதாக பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
இந்நோயைக் கட்டுப்படுத்த தற்போதுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லாவிட்டால், அவசரத் தேவையின் கீழ் அவற்றை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சின் செயலாளர் ஜானக தர்மகீர்த்தி தெரிவித்துள்ளார்.
நோயினால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் பால் மற்றும் இறைச்சியை உட்கொள்வதால் எந்தவிதமான சுகாதார பிரச்சினைகளும் ஏற்படாது எனவும், இந்த நோய் மனிதர்களை தாக்கும் அபாயம் இல்லை எனவும் டொக்டர் ஹேமலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.