புனர்வாழ்வளிக்கப்பட்டதன் பின்னரும் பல முன்னாள் போராளிகள் சிறையில் அடைக்கப்படுகின்றார்கள் என முன்னாள் போராளியான வைத்திலிங்கம் பாலசுரேஸ் (Vaiththilingam Balasuresh) குற்றம் சுமத்தியுள்ளார்.
புதுக்குடியிருப்பில் (Puthukkudiyiruppu) இன்றையதினம் (21.05.2024) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"முன்னாள் போராளிகளாகிய நாங்கள் பல துன்பங்களை அனுபவித்து வருகின்றோம்.
அண்மையில் கூட முன்னாள் போராளியாகிய அரவிந்தன் பல மக்கள் சேவைகள் புரிந்து வந்த போதும் எந்தவொரு வழக்குகளும் பதிவு செய்யப்படாத நிலையில் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரின், முகநூல் பதிவொன்று தொடர்பாகவே கைது செய்யப்பட்டதாக அறிந்தோம். ஆனால், நாங்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டதன் பின்னரே விடுதலை செய்யப்பட்டோம். மீண்டும் எங்களை துன்புறுத்தாதீர்கள்.
மேலும், அரவிந்தன் எனும் முன்னாள் போராளியை வழக்கு பதிவு செய்யாமலே வைத்திருக்கின்றீர்கள். அவர் குற்றம் இழைத்திருப்பின் வழக்கினை பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுத்து வழக்கினை துரிதப்படுத்துங்கள்” என சுட்டிக்காட்டியுள்ளார்.