ஏ.ஆர்.ஏ.பரீல்
கடந்த வருடம் அக்டோபர் மாதம் 7ஆம் திகதி முதல் இடம்பெற்று வரும் இஸ்ரேல் – பலஸ்தீன் யுத்தம் தற்போது உச்சத்தைத் தொட்டுள்ளது.
இஸ்ரேல் இராணுவம் கடந்த சனிக்கிழமை முதல் காஸா வடபகுதியின் ஜபாலியா அகதிகள் முகாம் மீது தொடர்ச்சியாக குண்டுத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஹமாஸ் போராளிகள் இப்பகுதியில் குழுக்களாக ஒன்றிணைந்துள்ளதாலே இத்தாக்குதல் மேற்கொள்ளபட்டு வருவதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் இராணுவ யுத்த தாங்கிகள் ஜபாலியா அகதிகள் முகாமை நோக்கி முன்னேறிச் செல்வதாக அப்பகுதியிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கும் பலஸ்தீனியர்கள் தெரிவிக்கின்றனர். அகதி முகாமிலிருக்கும் ஆயுதம் தரித்த பலஸ்தீன் குழுக்கள் தாமும் இஸ்ரேல் இராணுவத்தை எதிர்த்து போராடிக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளன.
ரபா மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக கடந்த ஒரு வாரத்தில் சுமார் மூன்று இலட்சத்து 60 ஆயிரம் பலஸ்தீனர்கள் ரபாவிலிருந்தும் வெளியேறியுள்ளனர்.
சுமார் ஒரு மில்லியன் பலஸ்தீனர்கள் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ள ரபாவின் மக்களை அங்கிருந்தும் வெளியேறுமாறு இஸ்ரேல் இராணுவம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ரபாவிலுள்ள ஹமாஸ் போராளிகளை அங்கிருந்தும் வெளியேற்றாது இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுப்பது அராஜகமாகும். இதனால் பொது மக்களே பாதிப்புக்குள்ளாவார்கள் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் அந்தனி பிளின்கன் இஸ்ரேலை எச்சரித்துள்ளார்.
ஜபாலியா அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்களில் அநேகர் கால்நடையாக அங்கிருந்தும் வெளியேறுகிறார்கள். ஜபாலியா அகதிகள் முகாமை நோக்கி இஸ்ரேலிய யுத்த தாங்கிகள் முன்னேறி வருவதாலே தாம் கஷ்டத்துக்கு மத்தியில் வெளியேறுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
‘எங்கு செல்வது என்று எமக்குத் தெரியாது. நாங்கள் ஒவ்வொரு பகுதிக்கு இடம்பெயர்ந்து வருகிறோம். நாங்கள் வீதிகளில் அச்சத்தினால் ஓடுகிறோம். யுத்த தாங்கிகள் மற்றும் புல்டோசர்கள் முன்னேறி வருவதை நான் என் கண்களினாலே பார்த்தேன்’ என்று பெண்மணியொருவர் ராய்டர் செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.
இஸ்ரேலிய யுத்த விமானங்கள் மத்திய காஸாவின் நுஸைரத் அகதிகள் முகாம் வீடொன்றின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தியதால் சிறுவர்கள் உள்ளடங்கலாக 14 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவின் வைத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
கண்மூடித்தனமாக குறிப்பாக சிறுவர்களை கொல்வதை இஸ்ரேல் உடன் நிறுத்திக் கொள்ள வேண்டுமென யுனிசெப் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஐ.நா.வைச் சேர்ந்த வெளிநாட்டுப் பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டதை ஐ.நா.வின் தலைவர் அந்தோனியோ குட்டரஸ் கண்டித்துள்ளார். ரபாவில் ஐ.நா.வின் வாகனம் மீது இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டதால் அவர் பலியானார். இது தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை இஸ்ரேல் இராணுவம் ரபாவிலுள்ள குவைத் வைத்தியசாலை பணியாளர்களை அங்கிருந்தும் வெளியேறுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் காஸாவின் சுகாதார கட்டமைப்பு பிராந்தியமெங்கும் ஸ்தம்பித்து விடுமென காஸாவின் சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.
கடந்த வருடம் அக்டோபர் 7 ஆம் திகதி முதல் இடம்பெற்று வரும் இஸ்ரேல் – பலஸ்தீன் யுத்தம் காரணமாக இதுவரை சுமார் 35,091 பேர் பலியாகியுள்ளனர். 78, 827 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். இதேவேளை 1,139 இஸ்ரேலியர்கள் பலியாகியுள்ளதுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் பணயக் கைதிகளாக உள்ளனர்.
இஸ்ரேலுக்கு எதிராக 33 தாக்குதல்கள்
ஜபாலியாவில் இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்கும் இஸ்ரேலிய இராணுவத்திற்கு எதிராக பலஸ்தீன் ஆயுதக் குழுக்கள் 33 தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளன. ஹமாஸ் போராளிகளே இவற்றில் அதிக எண்ணிக்கையிலான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
நாடோடிகளாக மாறியுள்ளோம்
வட காஸாவில் இஸ்ரேலிய இராணுவம் தரைவழி தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது. இஸ்ரேலிய படையினர் ஐ.நா.வின் அகதிகள் கூடாரங்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இதனால் அகதி முகாமில் தஞ்சமடைந்துள்ள பெரும் எண்ணிக்கையிலான மக்கள் அங்கிருந்தும் மீண்டும் தப்பியோட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து நாங்கள் ஐ.நா. நடாத்தும் பாடசாலைகளில் தங்கியிருக்கிறோம். அப்போதிலிருந்து இஸ்ரேலிய சிப்பாய்கள் பாடசாலைகளை முற்றுகையிட்டு வந்தார்கள். இதன்பின்பும் எம்மால் பொறுமையாக இருக்க முடியாது. எமது பிள்ளைகளுடன் நாங்கள் பல மாதங்களாக வீடுகளின்றி வாழ்கிறோம். எம்மீது ஏவுகணைகளும், குண்டுகளும் பொழியப்பட்டு வருகின்றன. நாங்கள் தற்போது இங்கிருந்தும் வெளியேறுவதற்குப் பலவந்தப்படுத்தப் பட்டுள்ளோம். நாங்கள் தற்போது நாடோடிகளாக மாறியுள்ளோம் என ஜபாலியா அகதி முகாமைச் சேர்ந்த சுவாத் அல்பிஸ் தெரிவித்துள்ளார்.
வட காஸாவின் நிலைமை விபரீதமாக மாறியுள்ளது. நாங்கள் பெரும் துயரத்தில் வாழ்கிறோம். நாங்கள் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு இடம் பெயர்வதற்கு பலவந்தப்படுத்தப்பட்டு வருகிறோம். என பெண்மணியொருவர் தெரிவித்தார். அவர் தனது பிள்ளைகள் மற்றும் உடமைகளுடன் இடம்பெயர்வதற்கு தயாரான நிலையில் உலகம் இஸ்ரேலுக்கு எதிராக செயற்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
எங்களது பிள்ளைகள் குண்டுத் தாக்குதல்களால் இறப்பதை விட பசியினாலும், நோயினாலும் இறக்கிறார்கள். உலகம் இது தொடர்பில் உடன் கவனம் செலுத்த வேண்டும். யுத்த நிறுத்தம் மூலம் இக்கொடிய யுத்தத்துக்கு முடிவு கட்ட வேண்டும்’ என்றார்