கனடாவிலிருந்து நாடுகடத்தப்படும் அபாயத்திலிருக்கும் நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருவதைக் காட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
கனடாவின் Prince Edward Island மாகாணம், 2024, அதாவது, இந்த ஆண்டில், மாகாண நாமினி திட்டத்தின் கீழ் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் நிரந்தரக் குடியிருப்பு அனுமதிகளின் எண்ணிக்கையை 25 சதவிகிதம் குறைக்க இருப்பதாக அறிவித்துள்ளது. மருத்துவ அமைப்புக்கு ஏற்பட்டுள்ள அழுத்தம் மற்றும் வீடுகள் தட்டுப்பாடு காரணமாக இந்த முடிவை எடுக்க இருப்பதாக அம்மாகாணம் அறிவித்துள்ளது.
மருத்துவத் துறையில் பணியாற்றுவோர் மற்றும் கட்டுமானப் பணி செய்வோர் போன்ற சில துறையினருக்கு மட்டுமே நிரந்தரக் குடியிருப்பு அனுமதி வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்பட உள்ளதாக மாகாண அரசு அறிவித்துள்ளது. அதன் பொருள் என்னவென்றால், அடுத்த சில மாதங்களில், மற்ற துறைகளில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோரின் பணி அனுமதிகள் நீட்டிக்கப்படாமல் போக வாய்ப்புள்ளது என்பதுதான். ஆகவே, மாகாண அரசின் இந்த முடிவை எதிர்த்து நாடுகடத்தப்படும் அபாயத்திலுள்ள நூற்றுக்கணக்கானோர் Charlottetownஇல் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவருகிறார்கள்.
இந்நிலையில், மாகாண தொழிலாளர் துறை அமைச்சரான Jenn Redmond, ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்தவர்களில் ஒருவரை சந்தித்து அவரிடம் பிரச்சினைகளைக் குறித்து கேட்டறிந்தார். அதைத்தொடர்ந்து, 2025இல் பணி உரிமம் காலாவதியாகும் நிலையிலிருப்போர், பயிற்சித் திட்டம் ஒன்றில் இணையலாம் என அவர் ஆலோசனை கூறியுள்ளார். அதாவது, எந்தெந்த துறைகளில் பணியாளர்களுக்கு அதிக தேவை உள்ளதோ, அந்த துறைகளில் பணி புரிவதற்கு, உரிய பயிற்சி பெறுமாறு அவர் ஆலோசனை கூறியுள்ளார். தான் படித்த துறையை விட்டுவிட்டு, திடீரென வேறு ஒரு துறையில் பயிற்சி பெற்று பணி செய்வது, எந்த அளவுக்கு, எத்தனை பேருக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை.