யுத்தம் முடிவுக்கு வந்து 15 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் யுத்தம் மிகத் தீவிரமாக இடம்பெற்ற வடக்கு கிழக்கில் மக்களின் வாழ்க்கை இயல்பு இன்றும் சாத்தியப்படாத ஒன்றாக இருக்கிறது. இதற்கு காரணம் அந்தப் பகுதிகளில் காணப்படுகின்ற கண்ணிவெடிகள் மற்றும் வெடிப்பொருட்களே.
மக்களுக்கு அச்சுறுத்தலாக காணப்படுகின்ற இந்த கண்ணிவெடிக்கையும், வெடிப்பொருட்களையும் அகற்றும் பணியில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மனித நேய கண்ணிவெடி அகற்றும் நிறுவனம் ஒன்று தனது பணிகளை 2010ஆம் ஆண்டு தொடக்கம் வினைத்திறனுடன் மேற்கொண்டு வருகிறது.
விரைவான மீள் குடியேற்ற நடவடிக்கைகளுக்கு இவ்வமைப்பின் கண்ணிவெடி அகற்றும் பணி பெரிதும் பங்காற்றியுள்ளது.
களப் பணியாளர்கள்
இந்நிறுவனமானது ஒரு அரச சார்பற்ற கண்ணிவெடியகற்றும் மனிதாபிமான உதவி வழங்கும் நிறுவனம். ஆரம்பத்தில் ஜப்பான் நாட்டின் நிதியுதவியுடன் தன்னுடைய கண்ணிவெடியகற்றும் வேலையைத் தொடங்கியது.
பின்னர் இந்நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கு ஜப்பானிய அரசாங்கம், அமெரிக்கா, அவுஸ்ரேலியா, ஜேர்மனிய குடியரசு மற்றும் சுவிஸ்ஸர்லாந்தின் கண்ணிவெடியற்ற உலகத்திற்கான அறக்கட்டளை என்பன நிதியுதவி வழங்குகின்றன.
ஆபத்துக்கள் நிறைந்த இந்த கண்ணிவெடிகள் அகற்றும் மனிதாபிமான பணிகளில் குறித்த நிறுவனத்தில் ஈடுப்பட்டுள்ளவர்களில் 90 வீதமானவர்கள் அப்பகுதிகளை சேர்ந்த தமிழர்களாவர். அத்தோடு சிங்களவர், முஸ்லிம் என பலரும் இணைந்தே இப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதில் முக்கியமாக இக் கண்ணிவெடிகற்றும் பணியில் ஈடுப்பட்டுள்ளவர்களில் 22 வீதமானவர்கள் பெண்களாக காணப்படுகின்றனர். குறிப்பாக கள பணியாளர்களாக புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் பணியாற்றுகின்றனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்றவர்களாக உள்ளமையால் இதுவொரு வாழ்வாதார தொழிலாகவும் அமைந்துள்ளது. முக்கியாமாக பெண் ஊழியர்கள் பெண் தலைமைத்துவக் குடும்பங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களாக காணப்படுகின்றனர்
ஜப்பான் அரசின் நிதி உதவி
கண்ணி வெடி அகற்றும் நிறுவனத்திற்கு நிதி வழங்கும் நாடுகளில் ஜப்பானும் ஒன்று. ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியினால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட கண்ணிவெடியகற்றல் மற்றும் மனிதநேய செயற்பாட்டினால் விடுவிக்கப்பட்ட மொத்த நிலப்பரப்பு ஏறத்தாள 6.903 சதுர கிலோமீற்றர் நிலப்;பரப்பாகும்.
இதனால் நேரடியாகப் பயனடைந்தவர்கள் 24,744 பேர்களும் மறைமுகப்பயனாளிகளாக 85241 பேரும் அடங்குவர். அத்தோடு கண்ணிவெடியகற்றலில் மீட்கப்பட்ட வெடிப்பொருட்களாக 54,414 தனிநபர் கண்ணிவெடிகளும், 102 கனரக வாகன கண்ணிவெடிகளும், 14,254 வெடிக்காத பொருட்கள் மற்றும் 55,834 சிறிய ரக வெடிபொருட்களும் கண்டெடுக்கப்பட்டு பாதுகாப்பாக அழிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க அரசின் நிதி உதவி
அமெரிக்க அரசாங்கத்தின் நிதியுதவியினால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட கண்ணிவெடியகற்றல் மற்றும் மனிதநேய செயற்பாட்டினால், விடுவிக்கப்பட்ட மொத்த நிலப்பரப்பு ஏறத்தாழ 5.408 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பாகும்.
இதன் மூலம் நேரடியாகப் பயன் அடைந்தவர்கள் 11,236 பேர்களும் அத்தோடு மறைமுகப்பயனாளிகளாக 97,506 பேரும் அடங்குவர்.
இக்கண்ணிவெடியகற்றலில் மீட்கப்பட்ட வெடிப்பொருட்களாக 42,490 தனிநபர் கண்ணிவெடிகளும், 101 கனரக வாகன கண்ணிவெடிகளும், 7,482 வெடிக்காத பொருட்களும், மற்றும் 77,994 சிறிய ரக வெடிபொருட்கள் என்பன கண்டெடுக்கப்பட்டு பாதுகாப்பாக அழிக்கப்பட்டுள்ளன.
ஜேர்மன், சுவிஸ் அரசின் நிதி உதவி
ஜேர்மனி மற்றும் சுவிஸ்ஸர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியினால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட கண்ணிவெடியகற்றல் மற்றும் மனிதநேய செயற்பாட்டினால் விடுவிக்கப்பட்ட மொத்த நிலப்பரப்பு ஏறத்தாழ 0.701 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பாகும்
இதன் மூலம் நேரடியாகப்பயன் அடைந்தவர்கள் 2,807 பேர்களும் மறைமுகப்பயனாளிகளாக 17,941 பேரும் அடங்குவர்.
அத்தோடு இக்கண்ணிவெடியகற்றலில் மீட்கப்பட்ட வெடிப்பொருட்களாக 8,934 தனிநபர் கண்ணிவெடிகளும், 19 கனரக வாகன கண்ணிவெடிகளும், 1,154 வெடிக்காத பொருட்களும், மற்றும் 9,962 சிறிய ரக வெடிபொருட்கள் என்பன கண்டெடுக்கப்பட்டு பாதுகாப்பாக அழிக்கப்பட்டுள்ளன.
மேற்படி நாடுகளில் நிதி உதவியில் மேற்குறித்த பெருமளவு கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத வெடிப் பொருட்கள் என்பன பாதுகாப்பாக அகற்றப்பட்டு அழிக்கப்பட்டமையானது இந்த பிரதேச மக்களுக்கு பெரும் நிம்மதி பெருமூச்சை விட வைத்துள்ளது.
மழைவிட்டும் தூவானம் விடாத கதையாய் யுத்தம் நிறைவுற்றும் அதன் விளைவாக உருவான ஆபத்துக்கள் நீங்காது காணப்பட்ட சூழலை மனித நேய கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தின் ஆபத்துக்கள் நிறைந்த பணிகள் மூலம் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
மக்களின் இயல்பு வாழ்க்கையை விரைவாக ஏற்படுத்தும் நடவடிக்கைகளை கண்ணிவெடிகள் அகற்றுவதன் மூலம் முழுமையடையச் செய்வதில் கண்ணி வெடி அகற்றும் அமைப்பின் பணி மகத்தானது.