இலங்கை டி20 (T20) அணியின் மேலதிக வீரர்கள் பட்டியலில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வியாஸ்காந்த் (V. Viyaskanth) தெரிவு செய்யப்பட்டுள்ளமை மிகவும் பெருமைக்குரியது என யாழ்.மத்திய கல்லூரி மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது.
வியாஸ்காந்த், தனது ஆரம்ப கல்வியை யாழ்.மத்திய கல்லூரியில் ஆரம்பித்ததில் இருந்து கிரிக்கெட்டில் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்ததாக அவரின் பெற்றோரும் நண்பர்களும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஆரம்பத்தில் இவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதனை கண்டித்த இவரது தாயார் கல்வியில் அக்கறை செலுத்துமாறு அறிவுரை வழங்கியுள்ளார்.
பாடசாலை மட்ட போட்டிகள்
இருப்பினும், அவருக்கு கிரிக்கெட் மீது காணப்பட்ட அளப்பரிய ஈடுபாடு காரணமாக தனது தந்தையின் ஆதரவுடன் தொடர்ச்சியாக கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில், வியாஸ்காந்த், தனது 10ஆவது வயதிலேயே 13 வயதிற்குட்பட்ட பாடசாலை கிரிக்கட் அணியில் பங்குபற்றி தனது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, 15 வயதுப்பிரிவு ,17 வயதுப்பிரிவு என படிப்படியாக முன்னேறி தனது 18ஆவது வயதில் 19 வயதுக்குட்பட்ட பிரிவில் விளையாடும் போது இலங்கை கிரிக்கட் அணியில் சிறப்பு வீரராக விளங்கிய குமார சங்கக்காரவின் (Kumar Sangakkara) பாராட்டுக்களைப் பெற்றுள்ளார்.
முதலாவது டி20 போட்டி
மேலும், இலங்கை பாடசாலைகள் சார்பிலான 19 வயதிற்குட்பட்ட தேசிய அணிக்கு தெரிவு செய்யப்பட்டதோடு அதில் ஆப்கானிஸ்தான் (Afghanistan) அணிக்கு எதிராக விளையாடியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இவர் 2020 டிசம்பரில் இலங்கை பிரீமியர் லீக் (Sri Lanka Premier League) சுற்றில் ஜப்(ஃ)னா ஸ்டேலியன்ஸ் (Jaffna stallions) அணிக்காக தனது முதலாவது டி20 போட்டியில் விளையாடியதோடு கடந்த 3 வருடங்களாக அந்த அணிக்காக விளையாடி வருகிறார்.
மேலும், இவர் தனது முதலாவது முதல் தரப் போட்டியை 2023 செப்டம்பரில் தமிழ் யூனியன் அணிக்காக நொன்டெசிக்ரிப்ட் (Nondescript) அணிக்கு எதிராக விளையாடினார்.
ஐ.பி.எல் தொடர்
அதேவேளை, இவ்வருட ஐபிஎல் (IPL) தொடரிலிருந்து வனிந்து ஹசரங்க (Wanindu Hasaranga), சன் ரைசர்ஸ் ஹைதரபாத் (SRH) அணியிலிருந்து விலகுவதாக இலங்கை கிரிக்கெட் அணி உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, அவரின் வெற்றிடத்தை பூர்த்தி செய்யும் முகமாக சன் ரைசர்ஸ் அணிக்காக வியாஸ்காந்த் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சன் ரைசர்ஸ் அணிக்காக தனது முதலாவது போட்டியில் களமிறங்கிய வியாஸ்காந்த், விக்கெட் எதனையும் பெறாவிட்டாலும் சிறப்பாக பந்து வீசி மிகவும் குறைந்தளவான ஓட்டங்களையே விட்டுக்கொடுத்தார்.
இந்நிலையில், வியாஸ்காந்த்தின் இந்த வளர்ச்சி, தங்களுக்கு பெருமை சேர்த்துள்ளதாக யாழ்.மத்திய கல்லூரி சமூகத்தினர், வியாஸ்காந்த்தின் பெற்றோர் மற்றும் அவரது நண்பர்கள் ஆகியோர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.