தண்டனைச் சட்டத் திருத்தத்திற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கிய பின்னர், நீதிமன்றக் காவலில் இருக்கும் காலமும், மேன்முறையீட்டு வழக்கின் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் காலமும், குற்றவாளி ஒருவரின் மொத்த சிறைத் தண்டனையிலிருந்து குறைக்கப்படும் என்று நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச (Wijeydasa Rajapaksha) தெரிவித்துள்ளார்.
சில கைதிகளுக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனைகளை ஆராயும்போது, சில கைதிகள் தடுப்புக்காவலிலும், மேல்முறையீட்டின்போதும் அதிக காலத்தை கழிப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்தே, இந்த திருத்தம் கொண்டு வரப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
போதைப்பொருள் குற்றங்கள்
சட்டம், நடைமுறைக்கு வந்ததும் மேல் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழு நிவாரண காலம் குறித்து முடிவு செய்யும், என்று அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்காக தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்பட மாட்டாது என்று அமைச்சர் கூறியுள்ளார்.