ஐக்கிய நாடுகள் சபையில் (United Nations) அங்கத்துவம் பெறுவதற்கான பலஸ்தீனத்தின் (Palestine) விண்ணப்பத்திற்கு ஆதரவாக இலங்கை (Sri Lanka) வாக்களித்துள்ளது.
பலஸ்தீன மக்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) தெரிவித்துள்ளார்.
குறித்த தகவலை அவர் தனது எக்ஸ் (Twitter) தள பதிவொன்றின் மூலமே குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபை
குறித்த பதிவில் அவர் மேலும் தெரிவிக்கையில், "ஐக்கிய நாடுகள் சபையில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது என்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபை தீர்மானத்தின் மூலம் ஐக்கிய நாடுகளின் உறுப்புரிமைக்கான பலஸ்தீனத்தின் விண்ணப்பத்திற்கு ஆதரவாக வாக்களித்ததன் மூலம் இன்று இலங்கையானது சர்வதேச சமூகத்தின் பெரும்பான்மையினருடன் இணைந்துள்ளது.
நிரந்தர சமாதானத்தை அடைவதற்கும் மனித துன்பங்களைப் போக்குவதற்கும் ஒரே வழி பேச்சுவார்த்தை மூலம் இரு நாடுகளின் தீர்வாகும் என்ற நிலைப்பாட்டில் இலங்கை எப்போதும் உறுதியாக உள்ளது.
மோதலின் கொடூரங்கள்
மனிதாபிமான நெருக்கடியை பேச்சுவார்த்தை மற்றும் கலந்துரையாடல் மூலம் தணிக்க வாய்ப்பு கிடைக்கும் போது மனித மோதலின் கொடூரங்கள் தொடரக்கூடாது.
முன்னோக்கி நகர்வது கடினமாகத் தோன்றினாலும் கூட ஒரு அமைதியான தீர்மானம் பலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல்(Israel) ஆகிய இரு நாட்டு மக்களுக்கும் நீடித்த தீர்வை அடைவதற்கான ஒரே வழி” என அவர் தெரிவித்துள்ளார்.