உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குமூலத்தை விசாரணை செய்து குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு நடவடிக்கை எடுக்குமாறு மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம இன்று (10) உத்தரவிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குமூலம் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை முன்னேற்றம் தொடர்பான மேலதிக அறிக்கையை சமர்ப்பித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன மற்றும் மக்கள் போராட்ட இயக்கத்தின் பிரஜைகள் தாக்கல் செய்த முறைப்பாடுகளை ஒரே நேரத்தில் விசாரணை செய்து வருவதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன சார்பில் ஆஜரான சட்டத்தரணி ராஜித லக்மால், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பல அடிப்படை உரிமை மீறல் மனுக்களின் முடிவில் மைத்திரிபால சிறிசேன குற்றவாளியாக காணப்பட்டதாகவும், அவர் இன்னும் அந்த மனுதாரர்களுக்கு நட்டஈடு வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.
மைத்திரிபால சிறிசேனவின் வாக்குமூலம் உண்மையா பொய்யா என விசாரணை நடத்துமாறும் நீதிமன்றில் கூறாமல் மேலும் பல உண்மைகளை மறைத்தால் உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் சட்டத்தரணி கோரியுள்ளார்.
இந்த வழக்கு ஜூன் 26ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.