அமீரகத்தில் மிக பிரபலமான ராஃபிள் டிரா 'அபுதாபி பிக் டிக்கெட்' தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது மீண்டும் பிக் டிக்கெட் டிரா நடத்தப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த " அறிவிப்பின் படி அபுதாபி பிக் டிக்கெட் தற்காலிக நிறுத்தத்திற்குப் பிறகு அதன் செயல்பாடுகளை இன்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பிக் டிக்கெட்டின் மாதாந்திர டிராவானது ஒவ்வொரு மாதம் 3ம் தேதி நடத்தப்பட்டு வருவது வழமையாகும். அதே போல் பிக் டிக்கெட்டின் அடுத்த நேரடி டிரா ஜூன் 3 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இன்று (மே 9) தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமீரக விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக அனைத்து முக்கிய தனியார் ரேஃபிள் டிரா ஆபரேட்டர்களும் (எமிரேட்ஸ் டிரா, மஹ்சூஸ் டிரா) இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தங்கள் செயல்பாடுகளை இடைநிறுத்தியது. இதன் தொடர்ச்சியாக அபுதாபி பிக் டிக்கெட்டும் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிக் டிக்கெட் மீண்டும் செயல்பாட்டுக்கு வருவதால் மே மாதம் முழுவதும், வரவிருக்கும் டிராவிற்கான டிக்கெட்டுகளை வாங்கும் எவருக்கும் 10 மில்லியன் திர்ஹம்கள் உத்தரவாதமான தொகையை வெல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன், எப்பொழுதும் வழங்கப்படும் சலுகை போலவே இந்த முறையும் இரண்டு டிக்கெட்டுகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒன்று இலவசமாக கிடைக்கும்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நீண்ட காலமாக நடத்தப்பட்டு வந்த, மிகவும் பிரபலமான அபுதாபி பிக் டிக்கெட் டிராவானது, அமீரகத்தின் ஒழுங்குமுறை கேமிங் தேவைகளுக்கு இணங்கும் விதமாக கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் தனது மாதாந்திர டிராக்களை தற்காலிகமாக இடைநிறுத்தியது குறிப்பிடத்தக்கது.