துபாயில் நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால், எமிரேட்டின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு தீர்வுகளை ஆராய்ந்து வருகிறது.
அந்தவகையில், RTA தற்போது நெரிசலைச் சமாளிக்க வாகன ஓட்டிகளிடம் கருத்து கேட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. எனவே, போக்குவரத்து இயக்க முறைகள் பற்றிய நுண்ணறிவுகளை சேகரிக்க தனியார் துறை ஊழியர்களிடையே ஒரு விரிவான கணக்கெடுப்பைத் தொடங்கியுள்ளது
இது தொடர்பாக ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், RTAஆனது போக்குவரத்து இயக்கத்தை நிர்வகித்தல் மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான அதன் முயற்சிகளின் ஒரு பகுதியாக, துபாயில் உள்ள பிற தொடர்புடைய நிறுவனங்களின் ஒத்துழைப்புடன், 'நெகிழ்வான வேலை நேரம்' மற்றும் 'தொலைதூர வேலை' தொடர்பாக தனியார் துறையில் தற்போதைய நிலைமையைப் புரிந்துகொள்வதற்கான ஒரு ஆய்வை தொடங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளது.
இது குறித்து RTAவின் செய்தித் தொடர்பாளர் ஊடகங்களிடம் பேசுகையில், தனியார் துறை ஊழியர்களிடையே சிறந்த பயண நடத்தைகள் மற்றும் பணி விருப்பங்கள் பற்றி கணக்கெடுப்பை நடத்தி, அந்தத் தகவலை பகுப்பாய்வு செய்வதன் மூலம், போக்குவரத்து ஓட்டத்தை நிர்வகிக்க மற்றும் நெரிசல் அளவைக் குறைக்கும் வாய்ப்புகளை அதிகாரிகளால் அடையாளம் காண முடியும் என்று விவரித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல், இந்த கணக்கெடுப்பில் பங்கேற்பதை ஊக்குவிக்கும் வகையில், பங்கேற்பவர்கள் பரிசுக் குலுக்கலில் நுழைவார்கள் என்றும் RTA தெரிவித்துள்ளது. எனவே, ஆய்வில் பங்கேற்கும்போது, குடியிருப்பாளர்கள் தங்கள் பெயர், தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் ஆகியவற்றை ஒதுக்கப்பட்ட இடத்தில் வழங்கலாம்.
அத்துடன் தகவலை வழங்குவது அவரவர் விருப்பத்திற்குரியது என்றும், மேலும் இந்தத் தரவு கண்டிப்பாக ரகசியமாக இருக்கும் என்றும் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் RTA உறுதியளித்துள்ளது.
RTA வெளியிட்ட அறிவிப்பின் படி, கணக்கெடுப்பில் வாரத்திற்கு அதிகாரப்பூர்வ வேலை நாட்களின் எண்ணிக்கை மற்றும் ஒரு நாளைக்கு வேலை நேரம், நிறுவனம் ஒரு நெகிழ்வான பணி தொடக்க சாளரத்தை செயல்படுத்துகிறதா மற்றும் தொலைநிலை பணி கொள்கை தற்போது நடைமுறையில் உள்ளதா என ஊழியர்களிடம் கேட்கப்படும் என்பது தெரிய வந்துள்ளது.
கூடுதலாக, பதிலளிப்பவர்கள் தங்கள் நிறுவனங்களில் செயல்படுத்தக்கூடிய சுருக்கப்பட்ட வேலைத் திட்டங்கள் போன்ற பிற பணிக் கொள்கைகளைப் பற்றிய தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். எனவே, இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்கவும், உங்கள் கருத்தைப் பகிரவும் https://bit.ly/3QfNGvx என்ற இந்த இணைப்பைக் கிளிக் செய்து பதியலாம்.
துபாய் ஒரு உலகளாவிய வணிக மையமாக வளர்ந்து வருவதால், அதன் போக்குவரத்து உள்கட்டமைப்பில் உள்ள சிரமம் வெளிப்படையாகத் தெரிகிறது. பீக் ஹவர்ஸில் ஏற்படும் நெரிசல் குடியிருப்பாளர்களின் வாழ்க்கைத் தரத்தைக் குறைத்து, பொருளாதார உற்பத்தி மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு சவால்களை ஏற்படுத்துவதாகவும் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.