இலங்கையின் பாதுகாப்புப் படையினர், இரத்தக்களரியான உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னர், சிறுபான்மைத் தமிழ் இனத்தைச் சேர்ந்த ஆண்களையும் பெண்களையும் கடத்திச் சென்று காவலில் வைத்து சித்திரவதை செய்ததாக மனித உரிமைக் குழு(Human Rights Committee) ஒன்று தமது புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது
பிரிவினைவாத தமிழ் போராளிகளுக்கும் அரசாங்கப் படைகளுக்கும் இடையிலான 26 ஆண்டுகால உள்நாட்டுப் போர் 2009 இல் முடிவுக்கு வந்தது. ஐக்கிய நாடுகளின் மதிப்பீட்டின்படி, இந்த மோதல்களின்போது 80,000 முதல 100,000 பேர் கொல்லப்பட்டனர்.
சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம்
இந்தநிலையில் இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் துஸ்பிரயோகங்களை ஆவணப்படுத்தி வரும் லண்டனை தளமாகக் கொண்ட சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் (ITJP) தனது அறிக்கையில், 2015 க்கும் - 2022க்கும் இடையில் இலங்கை அதிகாரிகளால் தாக்கப்பட்டதாகவும், எரிக்கப்பட்டதாகவும் மற்றும் தகாத முறைக்க ஆளானதாகவும் கூறிய 123 தமிழர்களின் விபரங்களை வெளியிட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கையின் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) பதவியேற்ற பிறகு இந்த 123 பேரில் 11 பேர் தடுத்து வைக்கப்பட்டதாகக் கூறி, ‘சித்திரவதைகள் மற்றும் வன்முறைகளில் காணாமல் போன தமிழர்கள் 2015-2022' என்ற தலைப்பில் நாளை வியாழக்கிழமை வெளியிடப்படும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டவர்கள், பிரித்தானியாவில் புகலிடம் கோரி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொடர்பான வழக்குகள்
இந்தநிவையில் பாதுகாப்புத் துறை சீர்திருத்தங்களைக் கையாள்வதற்கும், தமிழர்களுக்கு எதிரான இந்த வன்முறைக் கலாசாரத்திற்கு காரணமான அதிகாரிகளை வேரறுக்குவதற்கும் சர்வதேச சமூகம் இலங்கை மீது அதிக அழுத்தத்தை பிரயோகிக்காத வரையில் இந்த சம்பவங்கள் நிறுத்தப்பட வாய்ப்பில்லை என் சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தின்(ITJP) நிறைவேற்றுப் பணிப்பாளர் யாஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கை குறித்து ரொய்ட்டர்ஸிடம் கருத்துரைத்த இலங்கையின் வெளியுறவுத்துறை இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய(Tharaka Balasuriya), யுத்தம் முடிவடைந்த பின்னர், மனித உரிமைகள் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்காக, தமிழர்களுக்கு காணிகளை விடுவிப்பது, இராணுவத்தை முகாம்களுக்கு மட்டுப்படுத்துவது உள்ளிட்ட நல்லிணக்கத்தை மேம்படுத்தும் பல நடவடிக்கைகளை இலங்கை எடுத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில், மற்றும் காணாமற்போனதாகக் கூறப்படும் மக்கள் தொடர்பான வழக்குகளை ஆராய அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்டுள்ள உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவொன்றை நியமிப்பதற்கு இலங்கையும் செயற்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.