கத்தார் அரசின் மத்திய வங்கியான Qatar Central Bank (Himyan) ஹிமியான் ப்ரீபெய்ட் கார்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கத்தார் நாட்டில் ஆன்லைன் மூலம் நடக்கும் பணப் பரிவர்த்தனைகளில் மோசடி நடப்பதைத் தடுக்கவும், Mastercard & Visa போன்ற ஜாம்பவான்களின் ஆதிக்கத்தில் இருந்து விடுபடவும் இந்த புதிய தொழில் நுட்பத்தை கத்தார் நாடு அறிமுகம் செய்துள்ளது.
இந்த ஹிம்யான் கார்டு முழுக்க கத்தார் நாட்டு தொழில் நுட்பத்தில் செயல்படும் டெபிட் கார்டாக இருக்கும். இதன்மூலம் எவரும் Scam மூலம் பணம் திருடப்படும் எனும் அச்சம் இன்றி ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடலாம்.
ஹிமியான் ப்ரீபெய்ட் கார்டு என்றால் என்ன?
ஹிமியான் கார்டு என்பது கத்தார் நாட்டின் முதல் தேசிய ப்ரீபெய்ட் கார்டு ஆகும். இந்த அட்டையைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் கத்தாருக்குள் உள்ள அனைத்து விற்பனை நிலையங்களிலும், ஏடிஎம்களிலும், உள்ளூர் ஷாப்பிங் இணையதளங்களிலும் தயக்கமோ பயமோ இன்றி தாராளமாகப் பயன்படுத்தலாம்.
ஹிமியான் ப்ரீபெய்ட் கார்டில் ஒருவர் எப்படி பணத்தை ஏற்றுவது / மீண்டும் ஏற்றுவது?
வாடிக்கையாளர்கள் தங்களது தற்போதைய வங்கிக் கணக்கிலிருந்து கார்டில் பணத்தை ஏற்றலாம். அல்லது வங்கியின் இணைய தளம் மூலமோ வங்கியின் மொபைல் ஆப் மூலமோ, ஏடிஎம் மூலமோ பணத்தை ஏற்றலாம்.
ஹிமியான் ப்ரீபெய்ட் கார்டில் என்ன கரன்சியை ஏற்றலாம்?
வாடிக்கையாளர்கள், கத்தார் ரியாலை மட்டுமே ஹிமியான் ப்ரீபெய்ட் கார்டில் ஏற்ற முடியும். அமெரிக்க டாலர் போன்ற வெளிநாட்டு கரன்ஸிக்கு அனுமதியில்லை.
ஹிமியான் கார்டில் அதிகபட்ச இருப்பு எவ்வளவு?
கத்தார் ரியால் 30,000 வரை இருப்பு வைத்துக் கொள்ளலாம்.
ஹிமியான் ப்ரீபெய்ட் கார்டு மூலம் ஒருவர் என்ன வகையான பரிவர்த்தனைகளை செய்யலாம்?
வாடிக்கையாளர்கள், கத்தாருக்குள் உள்ள அனைத்து ஆன்லைன் ஷாப்பிங் இணையதளங்கள், விற்பனை நிலையங்கள், ஏடிஎம்கள் ஆகியவற்றில் பாதுகாப்பாகப் பண பரிவர்த்தனை செய்ய இயலும். (inneram.com)
கத்தாருக்கு வெளியே வேறு நாடுகளில் ஹிமியான் ப்ரீபெய்ட் கார்டைப் பயன்படுத்தலாமா?
இல்லை, தற்போதைக்கு இந்த வசதியை கத்தாருக்குள் மட்டுமே பயன்படுத்த முடியும்.
ஹிமியான் ப்ரீபெய்ட் கார்டுக்கு தினசரி பரிவர்த்தனை வரம்பு ஏதேனும் உள்ளதா?
ஆம், தினசரி கத்தார் ரியால் 10 ஆயிரம் வரை ஆன்லைனின் வர்த்தகம் செய்யலாம்.
ஹிமியான் ப்ரீபெய்ட் அட்டையை ஒருவர் எப்படிப் பெறுவது?
வாடிக்கையாளர்கள் தங்களது ஆன்லைன் பேங்க் மூலமோ, ஆப் மூலமோ விண்ணப்பித்து, அதற்கென அமைக்கப்பட்டுள்ள ஏடிஎம் மூலம் உடனடியாக அச்சிட்டு பெற்றுக் கொள்ளலாம்.