ஷார்ஜாவில் உள்ள ஏரிகளை கடலுடன் இணைக்கும் புதிய கால்வாய் திட்டம் ஒன்று ஷார்ஜா அரசால் தொடங்கப்பட்டுள்ளது. சுமார் 850 மீட்டர் நீளம் கொண்ட 'அல் லய்யா (AI Layya)' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய கால்வாய் திட்டமானது, நீரின் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டதாக கூறப்படுகிறது.
அதனுடன், அரேபிய வளைகுடாவில் இருந்து காலித் மற்றும் கான் ஏரிகளில் நீரின் ஓட்டத்தை அதிகரிப்பதும் இந்த புதிய திட்டத்தின் நோக்கம் என்று கால்வாய் திட்டப் பணிகளை மேற்கொண்டு வரும் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இரண்டு முக்கிய பாலங்கள், ஒரு நீர் கால்வாய், ஒரு பிரேக்வாட்டர் மற்றும் பிற கட்டுமானங்கள் அடங்கிய இந்த கால்வாயின் முன்னேற்றம் குறித்து ஷார்ஜாவின் ஆட்சியாளர் டாக்டர் ஷேக் சுல்தான் அல் காசிமி அவர்கள் ஆய்வு செய்துள்ளார்
நாட்டில் நிலவும் தீவிர தட்பவெப்ப நிலையிலும் கால்வாயை பாதுகாக்கும் 320 மீட்டர் நீளமுள்ள பிரேக்வாட்டரை கட்டி முடித்து வெற்றிகரமாக சோதனைகளும் நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த கால்வாய் சமூக, பொருளாதார மற்றும் பொழுதுபோக்குத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பல்வேறு வசதிகள் மற்றும் சேவைகளைக் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது
இத்திட்டத்தின் அடுத்த கட்டமாக, அரசு நிறுவனங்களின் கட்டிடக்கலை பாணியுடன் பொருந்தக்கூடிய இஸ்லாமிய கட்டிடக்கலை தன்மையுடன் புதிய நீர்முனையை கட்டுவது, கால்வாயின் எதிரே உள்ள ஜுபைல் மார்க்கெட் கட்டிடத்தை அமைப்பது ஆகியவை அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.