கனேடிய மாகாணமொன்றில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று ஆண்கள், உயிரணு தானம் மூலம், 600க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தந்தைகளாகியுள்ள விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சில நாடுகளில், ஒரு ஆண், இத்தனை முறை மட்டுமே உயிரணு தானம் செய்யலாம் என விதிமுறைகள் உள்ளன. அப்படியிருந்தும், விதிகளை மீறி பல பிள்ளைகளுக்கு தந்தைகளான ஆண்களைக் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளியாகிக்கொண்டுதான் இருக்கின்றன.
ஆனால், கனடாவிலோ, அப்படி நெறிமுறைகள் எதுவும் இல்லை. ஆக, கனடாவின் கியூபெக் மாகாணத்தில், இணையம் வாயிலாக உயிரணு தானம் பெற்று குழந்தை பெற்ற நூற்றுக்கணக்கான தாய்மார்கள், தங்கள் பிள்ளைகளுக்கு நூற்றுக்கணக்கான சகோதர சகோதரிகள் இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்கள்.
இந்த விடயம் தொடர்பில் அமைப்பொன்று விசாரணை மேற்கொள்ள, மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், அந்த 600 பிள்ளைகளுக்கும் உயிரணு தானம் செய்தது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று ஆண்கள்.
வேறுவகையில் கூறினால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று ஆண்கள், கனடாவின் கியூபெக் மாகாணத்திலுள்ள 600க்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கு தந்தைகளாகியுள்ளார்கள்.
இன்னொரு கவலையை ஏற்படுத்தியுள்ள செய்தி என்னவென்றால், உயிரணு தானம் செய்தவர்களில், இரண்டு பேருக்கு, கல்லீரலை பாதிக்கும் அரிய வகை மரபியல் நோய் ஒன்று உள்ளது என்பதுதான். ஆக, அவர்கள் உயிரணு தானம் கொடுத்ததன்மூலம் பிறக்கும் அடுத்த தலைமுறைக்கும் அந்த அரிய நோய் பரவும் அபாயம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.