மே தினத்தை முன்னிட்டு நாட்டின் தேசிய கட்சிகள் ஏற்பாடு செய்த பாரிய பேரணிகளும் கூட்டங்களும் நேற்றைய தினம் கொழும்பை ஸ்தம்பிக்கச் செய்திருந்தன.
கடந்த சில வருடங்களாக சோபையிழந்திருந்த மே தின நிகழ்வுகள் இவ்வரும் களை கட்டடியமைக்கான காரணம் இந்த ஆண்டு நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் தேர்தலாகும்.
நடக்கப் போவது ஜனாதிபதித் தேர்தலா அல்லது பாராளுமன்றத் தேர்தலா என்பது இதுவரை உறுதி செய்யப்படாவிட்டாலும் முதலில் ஜனாதிபதி தேர்தலே நடைபெறும் என அரசியல் வட்டாரங்கள் எதிர்வு கூறுகின்றன.
இப் பின்னணியில்தான் ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி மற்றும் பொது ஜன பெரமுன ஆகிய கட்சிகள் தமது பலத்தையும் மக்கள் ஆதரவையும் காண்பிப்பதற்கான தருணமாக இதனைப் பயன்படுத்திக் கொண்டன.
மே தினப் பேரணிக்கு வரும் மக்களைக் கொண்டு அரசியல் ஆதரவைக் கணிப்பிடுவது பொருத்தமில்லை என்ற போதிலும் நாட்டில் சமீப காலமாக ஏற்பட்டுள்ள அரசியல் தொடர்பான விழிப்புணர்வு நேற்றைய பேரணிகளில் வெளிப்பட்டதா என்ற கேள்விக்கு விடை காண முடியாதுள்ளது. எப்படியிருப்பினும் இலங்கையைப் பொறுத்தவரை மக்களின் மனமாற்றத்தை ஒருபோதும் எதிர்வு கூற முடியாது.
கடந்த இரு வருடங்களில் மக்கள் மத்தியில் ஏற்பட்ட அரசியல் விழிப்புணர்வு தேர்தலில் வாக்களிக்கும் வரை தாக்குப் பிடிக்குமா அல்லது தமது அரசியல் மாயாஜாலங்கள் மூலம் வழக்கமான சாக்கடை அரசியலுக்குள் மக்கள் தள்ளப்படுவார்களா என்ற கவலை தற்போது எழத் தொடங்கியுள்ளது.
அரசாங்கத்தின் விலைக் குறைப்புகள் சலுகைகள் மற்றும் ஊழல் அரசியல் கட்சிகளின் பொய் வாக்குறுதிகளில் மயங்குண்டு மக்கள் தமது அரசியல் விழிப்புணர்விலிருந்து திசை திருப்பப்படுவார்களாயின் அது மீண்டும் இந்த நாட்டை படுகுழியிலேயே தள்ள வழிவகுக்கும்.
அந்த வகையில் மக்களை அரசியல் ரீதியாக விழிப்புணர்வூட்ட வேண்டிய தேவை முன்னரைவிட தற்போது வெகுவாக எழுந்துள்ளது. 2022 ஆம் ஆண்டு ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக மக்கள் வீதிக்கு இறங்கிப் போராடினர். குடும்ப ஆட்சிக்கு இடமளிக்கமாட்டோம் என ஆக்ரோஷமாக கருத்துரைத்தனர். எனினும் இன்று அந்த நிலைமையைக் காண முடியவில்லை.
எனவேதான் மோசடி ஆட்சியாளர்கள் மக்களை திசை திருப்புவதற்கு நேற்றைய மே தினத்திலிருந்து தயாராகிவிட்டனர். இது மீண்டும் மக்கள் வழக்கமான சாக்கடை அரசியலின் பின்னாலேயே அள்ளுண்டு செல்லப் போகின்றனர் என்பதையே காண்பிப்பதாக உள்ளது.
மக்களை அரசியல் ரீதியாக அறிவூட்டுவதற்கான தேவை மீண்டும் எழுந்துள்ளது. அதேபோன்று தகுதியான அரசியல்வாதிகளை இனங்கண்டு எதிர்வரும் தேர்தல்களில் களமிறக்க வேண்டிய அவசியத்தை இது உணர்த்துகிறது. இது தொடர்பில் நேர்மையான அரசியல் ஆர்வலர்களும் சிவில் செயற்பாட்டாளர்களும் கவனம் செலுத்த வேண்டும். மக்களின் அரசியல் விழிப்புணர்வை மழுங்கடிக்கச் செய்து மீண்டும் மோசடி ஆட்சியாளர்கள்பின்னால் செல்ல அனுமதிக்கக் கூடாது. நாட்டில் அரசியல் கலாசாரத்தில் மாற்றம் ஒன்று ஏற்பட அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும். அதுவே காலத்தின் தேவையுமாகும்.