தமிழர் தாயகத்திலுள்ள மனிதப்புதைகுழிகள்! : காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர் அறிக்கை

தமிழர் தாயகத்தில் இனங்காணப்பட்டுள்ள மனிதப் புதைகுழிகள் சர்வதேச நிபுணத்துவத்துடனும், கண்காணிப்புடனும் அகழப்படவேண்டுமென வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினரின் ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமை (28) முல்லைத்தீவில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்து.

குறித்த ஆர்ப்பாட்டப் பேரணியின் முடிவில் வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினரால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே குறித்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழர் தாயகத்தில் இனங்காணப்பட்ட மனித புதைகுழி அகழ்வுப்பணிகளில் சர்வதேச கண்காணிப்பு, தமிழ் மக்களின் அபகரிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்படல், உள்நாட்டுப்போருக்கு சர்வதேச விசாரணை, அரசியல் கைதிகளின் விடுதலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி உள்ளிட்ட மிக முக்கியமான ஏழு அம்சக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மேலும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

காலா காலமாக தமிழினத்தின் மீது இனவழிப்பை மேற்கொண்டு வரும் சிங்கள பேரினவாதமானது மனித புதைகுழிகளையே தமிழ் மக்களுக்கு பரிசாக கொடுத்துள்ளது. செம்மணியில் ஆரம்பித்த மனித புதைகுழியானது இன்று கொக்குத்தொடுவாய் வரை நீண்டுள்ளது. 1984 டிசம்பர் 15 ஆம் திகதி கொக்குத்தொடுவாய் மற்றும் அதனை அண்டிய முல்லைத்தீவின் தெற்கு எல்லைக்கிராமங்களில் 131 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

அந்தப்படுகொலையுடன் கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். அதன் பின்னர் சிங்கள இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் அப்பிரதேசம் இருந்தது. போர் முடிந்த பின்னரே அங்கு மக்கள் குடியேற்றப்பட்டனர்.

எனவே போர் நடந்த காலப்பகுதிக்குள் தான் இந்தப் புதைகுழி தோன்றியிருக்க வேண்டும். அதைவிட போர்க்காலத்தில் பயன்படுத்தப்பட்ட உடைகளும் சான்றுப் பொருட்களாக கிடைத்திருக்கின்றன. இவ்வாறான நிலையில் அங்கு காணப்பட்ட இந்தப் புதைகுழி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் புதைகுழிகளாக இருக்கலாம் என்ற அச்சம் இப்போது மேலோங்கி வருகின்றது.

மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தொடர்பான வழக்கு நீண்டகாலமாக உண்மை கண்டறியப்படாமல் இலங்கைப் பேரினவாத அரசின் நீதித்துறையால் மூடி மறைக்கப்ப ட்டுவருகின்றது. எனவே முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் உள்ள மனிதப்புதைகுழி அகழ்வுப்பணி சர்வதேச நியமத்தின் அடிப்படையிலும், சர்வதேச கண்காணிப்பின் ஊடாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும் என தமிழ் மக்களாகிய நாம் வலியுறுத்துகின்றோம்.

தற்போது மனித புதைகுழிகள் வெளிவந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் சிறிலங்கா அரசானது "உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு" எனும் நாடகத்தை அரங்கேற்ற தொடக்கி உள்ளது. கடந்த கால அனுபவங்களிலிருந்து எவ்வித உள்ளூர் ஆணைக்குழுக்களோ பொறிமுறைகளோ எவ்வித நீதியையும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு வழங்கப்போவதில்லை.

மாறாக இதுவும் இன்னுமொரு காலத்தினை இழுத்தடிக்கும் ஒரு சதியே ஆகும். OMP எவ்வாறு ஒருவித செயலற்ற ஆணைக்குழுவாக மாறியதோ அவ்வாறே இதுவும் மாறும். இந்த "உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை" நாம் முற்றுமுழுதாக நிராகரிக்கின்றோம். மீண்டும் இந்த சிறிலங்காவின் ஏமாற்று வித்தைக்கு சில சர்வதேச நாடுகளும் அனுசரணை வழங்குவது எமக்கு கவலையையும் வருத்தத்தையும் தருகின்றது.

கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை சிங்களப் பேரினவாத அரசு ஈழத்தமிழர்கள் மீது இன்றும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இக்கட்டமைக்கப்பட்ட இனவழிப்பில் இருந்து தமிழ் மக்களைப் பாதுகாக்க தற்போதைய பூகோள பொருளாதார அரசியல் சூழ்நிலையில் தென்னாசியாவின் உணர் புள்ளியில் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்க்க முற்படும் சர்வதேச சக்திகள் பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

1. தமிழர் தாயகத்தில் காணப்படும் மனிதப்புதைகுழிகளின் அகழ்வுப்பணிகள் சர்வதேச நியமத்தின் அடிப்படையிலும், சர்வதேச கண்காணிப்பின் ஊடாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

2. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பான சர்வதேச விசாரணைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படுவதுடன், அவர்களுக்கு சர்வதேச நீதி வழங்கப்பட வேண்டும்.

3. தமிழின அழிப்பை மேற்கொண்ட, எமது உறவுகளை காணாமல் ஆக்கிய சிங்கள இராணுவமானது தமிழர் தாயகம் எங்கும் நிலைகொண்டுள்ளது. இந்த இராணுவமானது தமிழர் தாயகத்தில் 1983 ஆம் ஆண்டிற்கு முற்பட்ட அளவிற்கு குறைக்கப்பட்டு முகாம்களுக்குள் முடக்கப்பட வேண்டும். அவர்கள் வலிந்து பறித்த தமிழர் நிலங்கள் மீள கையளிக்கப்பட வேண்டும்.

4. சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் எவ்வித நிபந்தனைகளுமின்றி உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

5. காலங்காலமாக நடைபெற்று வரும் தமிழின அழிப்பிற்கு சர்வதேச நீதி பொறிமுறை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் / ICC, சர்வதேச நீதிமன்றம் ICJ) ஊடாக நீதி வழங்கப் படவேண்டும்.

6. அரச இயந்திரங்களான தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், வனப் பாதுகாப்பு திணைக்களம், நிலவள திணைக்களம் மற்றும் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை ஊடாக பௌத்த மயமாக்கல், திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை சிறிலங்கா அரசாங்கமானது முனைப்போடு நடைமுறைப்படுத்தி வருகிறது. வட- கிழக்கில் உள்ள சுமார் 200 இற்கும் மேற்பட்ட தொன்மை வாய்ந்த தமிழ் ஆலயங்களை கையகப்படுத்துவதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகிறது. அத்துடன் தமிழர் தாயகம் எங்கிலும் பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டும், அமைக்கப்படுவதிற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றது. இவ்வாறான நில அபகரிப்புகளும், பௌத்த சிங்கள மயமாக்கல்களும் உடனடியாக நிறுத்தப்பட்டு காணிகள் மீள கையளிக்கப்பட வேண்டும்.

7. மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டு வரும் ஊடகவியலாளர்கள் மீதும், இன அடக்குமுறைக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வரும் வலிந்து காணாமல் ஆக்கப்படவர்களன் உறவுகள், மாணவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்படுவதுடன் அவர்கள் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இது அவர்களின் பேச்சுரிமை, நடமாடும் சுதந்திரம் மற்றும் அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயலாகும். அத்துடன் தமிழர் தரப்பில் உருவாகும் விடுதலைக்கான தன்னெழுச்சியான அரசியல் வெளியினை ஒடுக்குவதில் சிங்கள பௌத்த பேரினவாத அரசு குறியாகவே உள்ளது. இவ்வாறான அடக்குமுறைகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.

மேற்குறித்த உடனடி, அவசரமான பிரச்சனைகள் தீர்க்கப்படுமிடத்தேதான், அரசியல் தீர்வை நோக்கி நசுர கூடிய புற சூழ்நிலை உருவாகும்.

தமிழ்த் தேசிய இனப்பிரச்சனைக்கான எந்தவொரு நிரந்தர அரசியல் தீர்வுக்கும், சர்வதேசத்தினால் நடாத்தப்பட்டு கண்காணிக்கப்படும் பொதுவாக்கெடுப்பின் மூலம் தமிழ் மக்களின் ஆணையைப் பெற வேண்டும். இதில் நம்மை நாமே ஆளக்கூடிய தீர்வுகளே தெரிவுகளாக உள்ளடக்கப்பட வேண்டும் என்பதையும் இவ் அறிக்கை மூலம் வெளிப்படுத்தி நிற்கின்றோம் எனக் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bootstrap
Get connected with us on social networks:
Puthiya Kural Newspaper

Puthiya Kural – Canada’s Tamil Monthly Newspaper brings you Canada Latest News, in-depth political analysis, and diaspora stories. Stay updated with breaking news, top headlines, and exclusive updates on Sri Lanka and the world—all in Tamil, with videos and photos.

Contact

Suite 2000, No: 1225 Kennady Road, Scarborough. On. Canada

admin@puthiyakural.ca

Copyright © Puthiya Kural Newspaper Publications Canada 2024. All Rights Reserved | Digital Solutions by Think Branding Inc