மணலாற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ள நாணயங்கள் வரலாற்றுத் தேடலைக் கொண்ட சமூக அக்கறையுள்ளவர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.
மணலாறு முன்னரங்கப் பகுதிகளில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களினால் மணலாற்றின் முன்னரங்கப் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த நாணயங்கள் ஈழப்போராட்டத்தில் இந்தியத்தலையீட்டினை எடுத்தியம்புவதாக உள்ளது.
அத்தோடு ஈழப்போராட்டம் மணலாற்றுக் காட்டுடன் கொண்டிருந்த நெருக்கமான தொடர்பாடலையும் அறிந்து கொள்ள உந்துதலாக இந்த நாணயங்கள் இருக்கின்றன.
ஒரு ரூபா இந்திய நாணயக்குற்றி ஒன்றும் இலங்கை நாணயங்களில் 50 சதக்குற்றி ஒன்றும் 25 சதக்குற்றி ஒன்றுமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதனை பணியாளர் ஒருவருடன் உரையாடும் போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய ஒரு ரூபா நாணயத்தில் 1985 எனவும் இலங்கை நாணயங்களாக 50 சதத்திலும் 25 சதத்தில் 1975 எனவும் குறிக்கப்பட்டிருக்கின்றது.
இலங்கையிலும் இந்தியாவிலும் பாவனையில் இருக்கும் நாணயத்தின் பெயர் ரூபா என்பதும் அவற்றின் பெறுமதியில் வேறுபாடு இருக்கிறது என்பதும் நடைமுறை அவதானமாகும்.
போர் முடிவுற்று 15 வருடங்களின் பின் போரின் போது முன்னரங்காக அமைந்திருந்த மணலாற்று முன்னரங்கில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகளை தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பணியாளர்கள் அகற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நெருக்கடியான சந்தர்ப்பங்களில் விடுதலைப் போராட்டத்தினை தாங்கிய, தற்காத்துக் கொண்ட பூமியாக மணலாறு அமைந்திருந்தது.
தமிழீழத்தின் இதயபூமியாக ஈழத்தமிழரின் விடுதலைப்போராட்டத்தின் போது மணலாறு நோக்கப்பட்டிருந்தது.
மணலாற்றில் அமைந்திருந்த இராணுவ முகாம் மீதான தாக்குதலின் போது வீரச்சாவடைந்த போராளிகளின் விபரங்களையும் மணலாற்றின் போரியலையும் தாங்கிய நூலாக இதயபூமி 1 என்ற நூல் வெளிவந்திருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த நூல் இதயபூமி 1 வெற்றிச் சமரின் ஒரு மாத நிறைவின் போது வெளியிடப்பட்டிருந்தது.இந்த நூலினை ஈழ எழுத்தாளர் மணலாறு விஜயன் தொகுத்துள்ளார்.
மணலாற்றில் இருந்த மண்கிண்டி மலை இராணுவ முகாம் மீதான தாக்குதலே இதயபூமி 1 என பெயரிடப்பட்டிருந்ததாக ஈழப்போராட்டத்தோடு ஒன்றிப்போய் இருந்த ஒருவரின் விபரிப்பாக இருந்தது.
மணலாற்றினைச் சேர்ந்த வீரச்சாவடைந்த போராளிகளின் விபரங்களைத் தாங்கிய நூலாக வணங்காமண் என்ற நூலும் வெளிவந்திருந்தது.இந்த நூலினை மணலாறு விஜயன் என்ற ஈழ எழுத்தாளர் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1987இல் நடைபெற்ற இலங்கை இந்திய ஒப்பந்தத்தினை அடுத்து இலங்கைக்கு இந்திய இராணுவம் அமைதிப்படை என வந்திருந்த போது மணலாற்றுக் காட்டில் விடுதலைப்புலிகளுக்கும் இந்திய இராணுவத்திற்கும் இடையில் பெரும் போர் நடந்திருந்தது.
நீண்ட நாட்களாக இந்திய இராணுவம் மணலாற்றில் முகாமிட்டிருந்தது.மணலாற்றுக் காட்டினுள் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளை சுற்றிவளைத்திருந்ததாக அந்த முகாமிடல் இருந்திருந்தது.
அந்த காலப்பகுதியில் இந்த நாணயங்களை அவர்கள் தவற விட்டிருக்கலாம் என வரலாற்றுத்துறை தொல்லியல் துறைசார்ந்த ஒருவர் மணலாற்றில் பெறப்பட்ட இந்த நாணயங்கள் தொடர்பில் கேட்ட போது குறிப்பிட்டார்.
அன்றிலிருந்து இன்றளவும் இயற்கைக் காடுகளாக காணப்படும் மணலாற்றின் பெருங்காட்டுப் பகுதியில் அயல் நாட்டு நாணயம் பெறப்பட்டிருப்பது வரலாற்றை ஆதாரங்களோடு பதிவு செய்து கொள்ள உதவுவதாக இருக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
விடுதலைப்புலிகளின் பயன்பாட்டில் இலங்கையில் இந்திய நாணயங்கள் பயன்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் இல்லை.கடல் வழியாக இந்தியா பயணப்பட்டு வரும் அவர்களுக்கு இந்திய நாணயங்களை இலங்கைக்கு அதுவும் மணலாற்றுக் காட்டுக்குள் கொண்டு சென்றிருக்க வேண்டிய தேவை இல்லை.
இந்த இந்திய நாணயம் மற்றும் இலங்கை நாணயங்களை இந்திய இராணுவமும் அவர்களுடன் சேர்ந்தியங்கிய இலங்கை இராணுவங்களுமே மணலாற்றுக் காட்டில் தவறவிட்டிருக்க வேண்டும் என கிடைக்கும் தகவல்களைக் கொண்டு ஊகிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றுத் தேடலுக்கு மணலாற்றுக் காடும் அங்குள்ள சுவடுகளும் சான்று பகர்ந்தவாறு இருக்கும் என்பது திண்ணம்.
வணங்காமண், இதயபூமி 1 ஆகிய நூல்களும் விடுதலைப்புலிகள் பத்திரிகையின் இதழ் 42 உம் மணலாற்றின் போரியல் வீர வரலாற்றை அறிந்து கொள்ள வாயில்களாக அமையும் என்பது திண்ணம்.
ஒரு விடுதலைப்போராட்டத்தின் கொரில்லாப் போராளிகளின் இருப்புக்கு இயற்கைக் காடுகளின் வகிபாகம் எந்தளவிற்கு இருக்கும் என்பதற்கு மணலாற்றுக்காடும் விடுதலைப்புலிகளும் என்ற தலைப்பினூடாக ஆராய்தல் பொருத்தப்பாடான புரிதலை இலகுவாக்கும் பல நிகழ்வுகளை பதிவு செய்து கொள்ள முடியும் என்பதும் நோக்கத்தக்கது.
மேலும், இலங்கையில் வடக்கு மாகாணத்தினை கிழக்கு மாகாணத்துடன் இணைத்தது வைத்திருக்கும் இடமாக மணலாறு இருந்து வருகிறது.