ஐக்கிய அரபு அமீரகத்தில் குளிர்காலம் முடிந்து விட்டதால் தற்போது பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் தினமும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கோடை வெயிலுக்கு இதமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 28) திடீரென அமீரகத்தின் சில குறிப்பிட்ட பகுதிகளில் மிதமானது முதல் கனமழையும் மற்றும் ஆலங்கட்டி மழையும் பெய்துள்ளது.
அமீரகத்தின் தேசிய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையின்படி துபாயில் உள்ள அல் குத்ரா பகுதியில் நேற்று மாலை 4 மணியளவில் கனமழை பெய்துள்ளது. மேலும் கனமழையுடன் பலத்த காற்றும் வீசியதாக NCM தெரிவித்துள்ளது. அதேபோன்று அல் குத்ரா சாலையில் உம் சுகீம் நோக்கி பயணித்த வாகன ஓட்டிகளும் தூசிப் புயல் வீசிய வீடியோக்களையும் பகிர்ந்துள்ளனர்
அல் குத்ரா பகுதியைத் தவிர, எமிரேட்ஸ் சாலையில் ஜெபல் அலி மற்றும் சைஹ் அல் சலேம் நோக்கிச் செல்லும் பகுதியிலும் நேற்று மாலையில் மழை பெய்ததாக கூறப்பட்டுள்ளது
அதே போல் அல் அய்னில், வெப்பமான வெப்பநிலைக்கு மத்தியில் ஆலங்கட்டி மழையும் நேற்று பெய்துள்ளது. புயல் மையத்தால் பகிரப்பட்ட அந்த வீடியோக்கள் அல் அய்ன் சிட்டியின் வடக்கே அல் ஷுவைப் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளதைக் காட்டுகிறது
இது தொடர்பாக அபுதாபியில், மழையுடனான வானிலை காரணமாக வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், மின்னணு தகவல் பலகைகளில் காட்டப்பட்டுள்ள வேக வரம்பை பின்பற்றி வாகனம் ஒட்டுமாறும் அபுதாபி காவல்துறையால் அறிவுறுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.